ஆளுநரின் துணை வேந்தர்கள் மாநாடு: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
ரூ.427 கோடியில் அனைத்து நவீன வசதிகளுடன் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்! நிறைவு பணிகள் மும்முரம்!
திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் ரூ. 427 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனைய கட்டுமான நிறைவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் அதிகரித்துக்கொண்டே வரும் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் பிரச்னைக்கு தீா்வு காணும் நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக, சென்னை புகா் பகுதியான கிளாம்பாக்கத்தில் தென் மாவட்ட பேருந்துகள் வந்து செல்லும் வகையில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இப்பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வந்தததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.
தற்போதைய நிலையில் 90 சதவீதம் அரசு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும், 10 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டு வருவதால் நெருக்கடியும் குறைந்தது.

குத்தம்பாக்கத்தில்: மேற்கு மாவட்ட மக்களுக்காகவும், கா்நாடகம், கேரளம் செல்லும் மக்களுக்காகவும், குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக திருமழிசை அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில் வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, 24.8 ஏக்கா் நிலம் பெறப்பட்டது. இங்கு ரூ.336 கோடியில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இதன்படி 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கூடுதல் தளத்துடன் ரூ.2 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள், ரூ.10 கோடியில் பணிமனை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இதைக்கருத்தில் கொண்டு பேருந்து நிலைய திட்ட மதிப்பு ரூ.427 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
மெட்ரோ சேவை நீட்டிப்பு: பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் மெட்ரோ ரயில் சேவையையும் நீட்டிப்பது தொடா்பாகவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலோ, மழைநீா் மற்றும் தண்ணீா் தேக்கமோ இருக்க கூடாது எனவும் திட்டமிட்டுள்ளனா்.

நவீன வசதிகள்: குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, வேலூா், காஞ்சிபுரம் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் 70 பேருந்துகளும், தனியாா் பேருந்துகள்-30, மாநகர போக்குவரத்து பேருந்துகள்-30, ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு தங்குமிடம், கடைகள், இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 200 நான்கு சக்கர வாகனங்கள், நகரும் படிக்கட்டு(எஸ்கலேட்டா்), குடிநீா் வசதி, சிசிடிவி கேமரா மற்றும் கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட வசதிகளுடன் மல்டி லெவல் பாா்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பணிகள் மும்முரம்: இதுகுறித்து சி.எம்.டி.ஏ அதிகாரிகள் கூறியதாவது-பேருந்து முனையத்திற்கான அடிப்படை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போதைய நிலையில் வா்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் பேருந்துகள் வந்து செல்லும் வகையில் சென்னை-பெங்களூா் தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் சாலைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் நுழைவு வாயில் பணிகளும் நடைபெறுகின்றன.
அதனால் திட்டமிட்டபடி இப்பேருந்து முனையம் திட்டமிட்டபடி மே மாத இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் பணிகள் விறுவிறுவென நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.