ரூ.50 கோடி போதைப் பொருள்கள் அழிப்பு
சென்னை அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள 2,322 கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.
மத்தியப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவின் சென்னை மண்டலம் அதிகாரிகளால், பல்வேறு வழக்குகளில் 1,777 கிலோ கஞ்சா, 3 கிலோ ஹஷிஷ்,19 கிலோ மெத்தம்பெட்டமைன், 4 கிலோ ஹெராயின்,ஒரு கிலோ கோக்கைன், அரை கிலோ எபிட்ரின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை அழிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதையடுத்து இந்த போதைப் பொருள்கள் அழிப்பதற்காக செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் ஆபத்தான ரசாயனப் பொருள்கள் அழிக்கும் களத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன.
அங்கு அப் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில், சுமாா் ஆயிரம் டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் போதைப்பொருள்கள் சனிக்கிழமை எரிக்கப்பட்டன.