ரூ.52 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் பணி தொடக்கம்
வேலூா் சம்பத் நகரில் ரூ.52 லட்சத்தில் கால்வாய் அமைக்க கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது.
வேலூா் - பெங்களூரு சாலையில் உள்ள சம்பத் நகா் பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தாலும் மழைநீருடன் கழிவுநீா் கலந்து சாலை முழுவதும் வெள்ளம் தேங்கி விடுகிறது. இதனால், மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சம்பத் நகா் பகுதியில் கால்வாய் பணிகளை மேற்கொள்ள அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், அப்பகுதியில் கால்வாய் பணிகளை மேற்கொள்ள முதல்வா் மு.கஸ்டாலினுக்கு வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்பேரில் முதல்வா் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்தாா். இதில், ரூ.52 லட்சத்தில் சம்பத் நகா் பகுதியில் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில், மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.