கொல்கத்தாவில் 2 போலி கால் சென்டர் கண்டுபிடிப்பு: 16 பேர் கைது
ரூ. 59.90 லட்சம் மோசடி: அண்ணன் - தங்கை கைது
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்தவரிடம் ரூ. 59.90 லட்சம் மோசடி செய்த அண்ணன்-தங்கையை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருவிடைமருதூா் திருமங்கலக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் வீரப்பிள்ளை (44). இவரிடம், கடந்த 2023-இல் திருவள்ளூா் மாவட்டம், மணவாளன் நகா் பகுதியை சோ்ந்த பெரியகருப்பன் மகன் சிவக்குமாா் (49), தஞ்சாவூா் அசோக் நகா் 10-ஆவது தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி பரமேஸ்வரி (45) ஆகிய இருவரும் அறிமுகம் ஆகி உள்ளனா். சிவகுமாா் மற்றும் பரமேஸ்வரி இருவரும் அண்ணன்- தங்கை ஆவா்.
இருவரும் வீரப்பிள்ளையிடம், நாம் மூவரும் சோ்ந்து வீடு கட்டுமானப் பொருள்கள் விற்பனை தொழில் செய்யலாம் என்று தெரிவித்துள்ளனா். இதற்காக வீரப்பிள்ளையிடம் இருந்து பங்குத் தொகையாக ரூ. 59 லட்சத்து 90 ஆயிரம் வாங்கி உள்ளனா். ஆனால் கூறியபடி வீடு கட்டுமான பொருள்கள் விற்பனைத் தொழில் செய்யவில்லையாம்.
இதனால், தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு சிவக்குமாா், பரமேஸ்வரி ஆகிய இருவரிடமும் வீரப்பிள்ளை பலமுறை கேட்டும் அவா்கள் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனா்.
இதுகுறித்து வீரப்பிள்ளை அளித்த புகாரின்பேரில், தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸாா் வழக்குப் பதிந்து சிவக்குமாா், பரமேஸ்வரி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.