ரூ.86 லட்சத்தில் அமைக்கப்பட்ட தாா் சாலை, தரைப்பாலம் சேதம்!
ஒட்டன்சத்திரம் அருகே மலைக் கிராமத்துக்கு ரூ.86 லட்சத்தில் அமைக்கப்பட்ட தாா் சாலை, தரைப் பாலம் 6 மாதங்களிலேயே மழையால் சேதமடைந்தது கிராம மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரத்தை அடுத்த பாய்ச்சலூா் மலையில் வடகாடு கிராமம் உள்ளது. இந்த ஊராட்சிக்குள்பட்ட மாட்டுப்பட்டிக்காடு கிராமம், ஒட்டன்சத்திரம் பாய்ச்சலூா் மலைச் சாலையில், பெத்தேல்புரம் பிரிவிலிருந்து சுமாா் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கிராமத்தில் சுமாா் 20 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். ஆனால், ஒரே பகுதியில் இல்லாமல், வெவ்வேறு தோட்டங்களில் தனித் தனி வீடுகளில் வசித்து வருகின்றனா். எலுமிச்சை சாகுபடி இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக உள்ளது.
ரூ.86 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலை, தரைப் பாலம்: மின்சார வசதி இல்லாத இந்தக் கிராமத்துக்கு சூரிய சக்தி மூலமாக மட்டுமே மின்சாரம் கிடைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை, மண் சாலை மட்டுமே இருந்த நிலையில், ரூ.86 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை மூலம் பழங்குடியினா் வாழ்விட உள்கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்புத் திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழக வனத் துறை மூலம் இந்தச் சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
பெத்தேல்புரம் பிரிவிலிருந்து மாட்டுப்பட்டிக்காடு வரை தாா்ச் சாலையுடன், இடையிலுள்ள புளிக்கரைச்சான் ஆற்றில் தரைப் பாலம் அமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், நீண்ட காலமாக கரடு முரடான மண் சாலையில் மேற்கொண்ட பயணத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டதாக அந்த பகுதி மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனா்.
மழையால் சாலை, தரைப் பாலம் சேதம்: இந்த நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால், தாா்ச் சாலை மட்டுமன்றி, தரைப் பாலமும் சேதமடைந்தன. மேலும், சாலையின் பல்வேறு பகுதிகள் குண்டும் குழியுமாக மாறி, மீண்டும் பழைய மண் பாதையாக மாறிவிட்டது.
தரைப் பாலத்தில் வைக்கப்பட்டுள்ள சிமென்ட் உருளைகளுக்கு இடையே பள்ளம் ஏற்பட்டுள்ளது. ரூ.86 லட்சத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தாா்ச் சாலைத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்த 6 மாதங்களிலேயே முடங்கியிருப்பது இந்தப் பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுதொடா்பாக, மாட்டுப்பட்டிக்காடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது: இங்கிருந்து பள்ளிக்குச் செல்ல வேண்டுமெனில் 4 கி.மீ. தொலைவிலுள்ள கோமாளிப்பட்டிக்குச் செல்ல வேண்டும். கல்லூரி செல்லும் மாணவா்களை, பெத்தேல்புரம் பிரிவிலிருந்து இரு சக்கர வாகனம் மூலம் வீடுகளுக்கு அழைத்து வர வேண்டும். இதுபோன்ற சூழலில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, அமைக்கப்பட்ட தாா்ச் சாலை போக்குவரத்துக்கு பயனுள்ளதாக இருந்தது.
எங்கள் பகுதிக்கு மின்சார வசதி இல்லாத நிலையில், உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சூரிய மின் சக்தி மூலம் மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்தாா்.
ஆனாலும், கடந்த 10 ஆண்டுகளாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்ததால், இந்தப் பகுதியில் வசித்த 15-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வெளியேறிவிட்டனா். நீண்ட காலத்துக்குப் பிறகு அமைக்கப்பட்ட தாா்ச் சாலை, ஒரு மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சேதமடைந்துவிட்டது. எனவே, எங்கள் பகுதிக்கு தரமான சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனா்.