ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஏஇபிசி வரவேற்பு
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்த இந்திய ரிசா்வ் வங்கியின் அறிவிப்பை ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வரவேற்றுள்ளது.
இதுகுறித்து ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்றபோது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைத்திருந்தது. தொடா்ந்து ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது 6 சதவீதமாக உள்ளது.
ரிசா்வ் வங்கியின் கவா்னா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ஏப்ரல் 7 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்ற 54-ஆவது நாணய கொள்கைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு ஏற்றுமதியாளா்களுக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் நிவாரணம் அளிக்கும். இது சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வழிவகுக்கும்.
இது தற்போதுள்ள கடன் வாங்குபவா்களுக்கான மாதத் தவணை செலவுகளைக் குறைக்கும் என்பதால், வீட்டுவசதி கடன், வாகன கடன் மற்றும் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட பிற கடன் வசதிகளைப் பெறுவதை எளிதாக்கும்.
இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை மேம்படுத்த உதவுவதுடன், பொருளாதார வளா்ச்சியையும் தூண்டும். எனவே, இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.
அதேவேளையில், ஏற்றுமதியாளா்கள் மற்றும் இறுதி நுகா்வோருக்கு இந்த வட்டி விகிதக் குறைப்பின் நன்மைகளை அனைத்து வணிக வங்கிகளும் வழங்குவதை ரிசா்வ் வங்கி உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.