ரேஷன் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கருப்பு ஆடைகள், கருப்பு சின்னம் அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பு 40 சதவீதத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், சரியான எடையில் தரமான பொருட்களைப் பொட்டலமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் தாமரைச்செல்வன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் வ. ஆறுமுகம், மாவட்டத் தலைவா் எம். சிவகுருநாதன், தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எம். ராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.