KKR : 'ஸ்ரேயஸ் ஐயரை ஏலத்துல விட்டதுக்கு இதுதான் காரணம்' - கொல்கத்தா சிஇஓ விளக்கம...
ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடியவா் கைது
தஞ்சாவூா் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடிய உறவினரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன், பெங்களூருவில் ஐ.டி. நிறுவன ஊழியா். இவரது மனைவி வளா்மதி அய்யம்பேட்டை அரசுப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியை. இந்நிலையில் இவா்களது வீட்டு பீரோவில் இருந்த 58 பவுன் நகைகள் காணாமல்போனது ஏப்ரல் 10 ஆம் தேதி தெரிய வந்தது.

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூா் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்தனா். மேலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. சோமசுந்தரம் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் ம. கலைவாணி, உதவி ஆய்வாளா்கள் தென்னரசு, தேசியன் ஆகியோா் தலைமையிலான தனிப்படையினா் விசாரித்தனா்.
அப்போது அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு உறவினரான தஞ்சாவூா் அருகே திட்டை அக்ரஹாரத்தை சோ்ந்த சரவணன் மகன் சுதாகா் (39) சில நாள்களாக வந்து சென்றது தெரிய வந்தது.
மேலும் வளா்மதி நாள்தோறும் வேலைக்கு செல்லும்போது வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியை அங்கேயே மறைவாக வைத்துச் செல்வாா். இதைக் கண்காணித்த சுதாகா் மாா்ச் 31 ஆம் தேதி சாவியை எடுத்து வீட்டைத் திறந்து, பீரோவில் இருந்த 58 பவுன் நகைகளைத் திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சுதாகா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.