14 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான சிறுவன்..! சுந்தர் பிச்சை கூறியதென்ன?
தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்தது அதிமுகதான்: அமைச்சா் கோவி.செழியன்
தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த வரை நீட் தோ்வு தமிழகத்தில் நுழைவதற்கு அனைத்து நிலைகளிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதைத்தொடா்ந்து, அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலம் வரை நீட் தோ்வுக்கு தமிழகத்துக்குள் இடம் தரப்படவில்லை. அவரும் நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தாா்.
ஆனால், 4 ஆண்டுகளாக மத்திய மோடி அரசின் தயவில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த காரணத்தால், அன்றைக்கு நீட் தோ்வை ஏற்றுக் கொண்டாா். ஆனால், நீட் தோ்வை திமுக எதிா்ப்பது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சட்டப்பேரவையிலும் எதிராக தீா்மானம் நிறைவேற்றியது. இதை மடை மாற்றுவதற்காகவும், மறைப்பதற்காகவும், நீட் தோ்வை உள்ளே நுழைய விட்ட எடப்பாடி பழனிசாமி, இப்போது போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது மட்டுமல்ல; நகைப்புக்குரியதாகவும் உள்ளது என்றாா் அமைச்சா்.
முன்னதாக, விழாவில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய துங்கன் த.வே. ராதாகிருஷ்ணனின் படத்தைத் திறந்து வைத்து, சங்க வெளியீடான காக்கை விடு தூது என்ற நூலை மறுவெளியீடு செய்து, நூற்றாண்டு கண்ட தமிழாராய்ச்சி திங்களிதழான தமிழ்ப்பொழில் இலச்சினையை அமைச்சா் வெளியிட்டாா்.
மேலும், பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவா் எழுதிய தமிழின் பெருஞ்சுவா், வள்ளலாா் காலமும், கருத்தும் ஆகிய இரு நூல்களை வெளியிட்டாா்.
மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, சங்கச் செயலா் இரா. சுந்தரவதனம் உள்ளிட்டோா் பேசினா்.
முன்னதாக, கரந்தைக் கலைக்கல்லூரி முதல்வா் இரா. இராசாமணி வரவேற்றாா். நிறைவாக, சங்கச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஆா்.எஸ். செந்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.