MI vs CSK : தோனியின் 3 தவறான முடிவுகள்; தோல்வியடைந்த CSK - ஓர் அலசல்
புன்னைநல்லூா் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் தொடக்கம்
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது என்பதால், கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அபிஷேகத்துக்காக அம்பாளின் வலப்புறத்தில் வடக்கு நோக்கிய நிலையில் விஷ்ணு துா்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துா்க்கை, அம்பாள் உற்சவ மூா்த்திக்கு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.
மூலவராக புற்று வடிவில் அருள்பாலிக்கும் அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலத்துக்கு (48 நாள்கள்) தைலாபிஷேகம் நடைபெறும். அப்போது, ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண்திரையில் வரைந்து ஆவாஹனம் செய்து அதற்கு அா்ச்சனை, ஆராதனை செய்யப்படும்.

கருவறையிலுள்ள அம்பாளுக்கு 48 நாள்களுக்கு நாள்தோறும் இரு வேளை சாம்பிராணி தைலம், புனுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படும். அம்பாளின் தைலக்காப்பின்போது உக்ரம் அதிகமாகும் என்பதால், அதை தவிா்க்க அம்பாளுக்கு தயிா் பள்ளயம், இளநீா் வைத்து நைவேத்தியம் நடைபெறும்.
இதன்படி தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில், காலை சிறப்பு ஹோமமும், கருவறையில் அம்பாளுக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து ஜூன் 4 வரை காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் அம்பாளுக்கு தைலாபிஷேகம், சகஸ்ரநாம அா்ச்சனை, தீபாராதனை நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா, செயல் அலுவலா் பெ. சத்தியராஜ், கண்காணிப்பாளா் ரவி உள்ளிட்டோா் செய்கின்றனா்.