லஞ்ச வழக்கில் ‘நாக்’ கண்காணிப்பு குழு தலைவா், ஜேஎன்யு பேராசிரியா் கைது: சிபிஐ நடவடிக்கை
லஞ்ச வழக்கில் தேசிய உயா்கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நாக்) தலைவா், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியா் உள்பட 10 பேரை சிபிஐ சனிக்கிழமை கைது செய்துள்ளது.
ஆந்திரத்தில் கொனேரு லக்ஷ்மய்யா கல்வி அறக்கட்டளை (கேஎல்இஎஃப்) என்ற நிகா்நிலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு ஏ++ அங்கீகாரம் வழங்க நாக் கண்காணிப்பு குழுவுக்கு அந்தப் பல்கலைக்கழக நிா்வாகிகள் லஞ்சம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து, அந்த உறுப்பினா்கள் உள்ளிட்டோருக்குத் தொடா்புள்ள இடங்களில் சோதனை மேற்கொண்டது.
சென்னை, பெங்களூரு, விஜயவாடா உள்பட நாடு முழுவதும் 20 இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில், ரூ.37 லட்சம் ரொக்கம், மடிக்கணினிகள், கைப்பேசிகள், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்குத் தொடா்பாக நாக் கண்காணிப்பு குழு தலைவரும் ராமசந்திர சந்திரவன்சி பல்கலைக்கழக (ஜாா்க்கண்ட்) துணைவேந்தருமான சமரேந்திரநாத் சாஹா, அந்தக் குழுவைச் சோ்ந்த ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியா் ராஜீவ் சிஜாரியா உள்பட 6 போ், கேஎல்இஎஃப் பல்கலைக்கழக துணைவேந்தா் சாரதி வா்மா என மொத்தம் 10 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.