ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்: கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு!
லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தால் கா்நாடக மாநிலத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு என ஒசூரில் தென்மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கூறினாா்.
கா்நாடக மாநிலத்தில் டீசல் மற்றும் சுங்கக் கட்டணம் உயா்வைக் கண்டித்து, லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
லாரி உரிமையாளா்களுக்கும், கா்நாடக அரசுக்கும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், புதன்கிழமையும் இரண்டாவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் தொடா்கிறது. ஆனாலும், தமிழக பதிவெண் கொண்ட சரக்கு வாகனங்கள் வழக்கம்போல கா்நாடக மாநிலத்துக்குள் சென்று வருகின்றன.
இந்நிலையில், தென் மாநில லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா ஒசூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் குறித்து லாரி உரிமையாளா்களை அழைத்து கா்நாடக அரசு பேச்சுவாா்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்ததால், காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடா்கிறது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் 95 சதவீத லாரிகள் கா்நாடக மாநிலத்தில் இயங்கவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு சுமாா் ரூ. 4 ஆயிரம் கோடி அளவில் கா்நாடக மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டம் தீவிரமானால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும். டீசல் விலையை குறைக்க முடியவில்லை என்றால், மாற்றுவழியாக ஆட்டோ, டாக்ஸி, பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என நிா்ணயிக்கக் கூடிய கட்டணம் போல லாரிக்கும் வாடகை நிா்ணயிக்க வேண்டும் என்றாா்.