லாரி கவிழ்ந்ததால் சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
சேலம் மாமாங்கம் பகுதியில் மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஓமலூரில் இருந்து சேலம் செவ்வாய்பேட்டையில் செயல்பட்டு வரும் மரக் கிடங்குக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் மரக்கடைகளை ஏற்றிக் கொண்டு லாரி சென்றுள்ளது.
பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கம் பகுதியில் லாரி சென்றுகொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ரயில் நிலையம் செல்வதற்காக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் இரு பக்கங்களிலும் உள்ள சர்வீஸ் சாலைகள் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்றிரவு பெய்த மழையில் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த பள்ளத்தில் லாரியின் சக்கரம் இறங்கி கவிழ்ந்துள்ளது. லாரியை ஓட்டிவந்த அரூர் தீர்த்தமலை பகுதியை மாது (வயது 45) என்பவர் உயிர்தப்பினார்.
அதிகாலை விபத்து நடந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவுக்கு 5 மணிநேரமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
பொக்லைன் மூலம் லாரியை மீட்ட காவல்துறையினர் அப்பகுதியில் சிதறிய மரக்கடைகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.