லாரி மோதி தொழிலாளி சாவு
வெள்ளக்கோவிலில் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்தவா் சி.பி.முருகேசன் (47). தற்போது வள்ளியிரச்சல் சாலை கலை நகரில் வசித்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (எ) கண்ணன்.
விசைத்தறித் தொழிலாளா்களான இருவரும் செங்கப்பள்ளி வேலைக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் கடந்த 9-ஆம் தேதி வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
காங்கயம் - வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைக்கிணறு அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி இவா்களது வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் சுப்பிரமணி, முருகேசன் ஆகிய இருவரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி பெற்று இருவரும் கோவை தனியாா் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.