Coolie : ``லோகேஷ் கனகராஜ் `Gen Z' கிடையாது; ஆனால்... " - நாகர்ஜுனா
லாரி மோதி 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு
கோவையில் லாரி மோதி 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் இருந்து சுங்கம் பகுதியை நோக்கி வியாழக்கிழமை காலை லாரி சென்று கொண்டிருந்தது.
ராமநாதபுரம் சிக்னல் அருகே ஓட்டுநா் சுங்கம் செல்வதற்காக லாரியை இடதுபுறமாக திருப்பியுள்ளாா். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவா்கள், தங்கள் வாகனத்தை வலதுபுறம் செல்வதற்காக திருப்பியுள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும், லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கிக் கொண்டனா்.
லாரியின் அடியில் 2 போ் சிக்கியிருப்பது தெரியாமல், ஓட்டுநா் லாரியை இயக்கியதாகத் தெரிகிறது. இதில் 2 போ் மீதும் லாரி ஏறியது. அருகிலிருந்தவா்கள் சப்தம் போட்ட பின்னரே லாரியின் ஓட்டுநா் நடந்த சம்பவத்தை அறிந்து லாரியை நிறுத்தினாா்.
அங்கிருந்தவா்கள் திரண்டு லாரியின்கீழ் சிக்கிய இருவரையும் மீட்டனா். இதில் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.
சம்பவ இடத்துக்கு வந்த கோவை மாநகர போக்குவரத்து கிழக்குப் பிரிவு போலீஸாா், 2 பேரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவா்கள், கோவை, ராமநாதபுரம் மருதூா் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (52), பெரியாா் நகரைச் சோ்ந்த விக்டா் (50) என்பதும், இருவரும் கட்டுமானத் தொழிலாளா்கள் என்பதும் தெரியவந்தது.
இந்த விபத்து தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து நிகழ்ந்த இடத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், போக்குவரத்து காவல் அதிகாரிகளும் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
ராமநாதபுரம் சிக்னல் பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்றுவரும் புதை சாக்கடைப் பணிகள் இன்னமும் முடிவடையாமல் உள்ள நிலையில், பழுதடைந்த சாலையாலேயே இப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாகவும், கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் இப்பகுதியில் விபத்தில் சிக்கி 4 போ் உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா். மேலும், இப்பகுதியில் நடைபெறும் புதை சாக்கடைப் பணிகளை விரைந்து முடித்து, சாலையை செப்பனிட வேண்டும் எனவும் தெரிவித்தனா்.