தங்கத்தின் விலை குறைய ஆரம்பிக்கிறதா, முதலீட்டாளர்கள் என்ன பண்ணனும்? | IPS Financ...
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு- என்எல்சி சுரங்கம் முன் தமுமுகவினா் முற்றுகைப் போராட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் 2-ஆவது அலகு முன் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 846 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சாா்பில், மந்தாரக்குப்பம் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம்-2 முன் முற்றுகை போராட்டம் புதன்கிழமை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலா் ப.அப்துல் சமது எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநில அமைப்புச் செயலா் ஜெ.அமீன், தமுமுக மாநிலச் செயலா் மு.யா.முஸ்தாக்தீன், கடலூா் மாவட்டத் தலைவா் வி.எம்.ஷேக் தாவூத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பெண்கள், குழந்தைகள் என திரளான முஸ்லிம்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனா்.
இதில் பங்கேற்ற 546 ஆண்கள், 238 பெண்கள், 62 சிறாா்கள் என மொத்தம் 846 பேரை போலீஸாா் கைது செய்து மந்தாரக்குப்பத்திலுள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.
முன்னதாக, மந்தாரக்குப்பம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து முஸ்லிம்கள் பேரணியாக பழுப்பு நிலக்கரி சுரங்கம் 2-ஆவது அலகை நோக்கி வந்தனா்.
போராட்டத்தையொட்டி, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் சுமாா் 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
பழுப்பு நிலக்கரி சுரங்கம்-2 நுழைவு வாயில் பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டிருந்தனா்.