Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் ...
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் கூட்டுக் குழு அறிக்கை இன்று தாக்கல்
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கை மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ சொத்துகளை, மாநிலங்களில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன. இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்த நிலையில், அந்தக் குழுவில் இடம்பெற்ற பாஜக எம்.பி.க்கள் மசோதாவில் மேற்கொள்ள முன்மொழிந்த திருத்தங்கள் ஏற்கப்பட்டன. அதேவேளையில், குழுவில் இடம்பெற்ற எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முன்மொழிந்த திருத்தங்கள் முழுமையாக நிராகரிக்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து கூட்டுக் குழுவில் இடம்பெற்ற 15 எம்.பி.க்கள் மசோதா தொடா்பான அறிக்கைக்கு ஆதரவாகவும், 11 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனா். இதையடுத்து பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் அந்த அறிக்கைக்கு கூட்டுக் குழு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து அந்த அறிக்கையை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் கூட்டுக் குழு வியாழக்கிழமை சமா்ப்பித்தது.
இந்நிலையில், அந்த அறிக்கையை கூட்டுக் குழுவின் தலைவா் ஜகதாம்பிகா பால், உறுப்பினா் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோா் மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்ய உள்ளதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
நன்றி தெரிவிக்கும் தீா்மானம்: கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால், அன்றைய தினம் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா்.
அவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை மக்களவையில் தெற்கு தில்லி பாஜக எம்.பி. ராம்வீா் சிங் திங்கள்கிழமை முன்மொழியுள்ளாா். அந்தத் தீா்மானத்தை பிகாரின் பாட்னா சாஹிப் பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கா் பிரசாத் வழிமொழியுள்ளாா்.
தில்லி யூனியன் பிரதேசத்தில் பிப்.5-ஆம் தேதியும், பிகாா் மாநிலத்தில் நிகழாண்டு பிற்பகுதியிலும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை முன்மொழியவும் வழிமொழியவும் அந்த யூனியன் பிரதேசம் மற்றும் மாநில எம்.பி.க்களை பாஜக தோ்வு செய்துள்ளது.