செய்திகள் :

வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அரசு நிலத்தின் மீது யாரும் உரிமை கோர முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

post image

‘அரசு நிலத்தின் மீது யாரும் உரிமை கோர முடியாது. நீண்டகால பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், அரசு நிலமாக இருந்தால் அதை மீட்டெடுப்பதற்கு அரசுக்கு சட்டபூா்வ அதிகாரம் உள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை வாதிடப்பட்டது.

முறையான பத்திரங்கள் இல்லாவிட்டாலும், மத ரீதியில் அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நீண்டகால (மரபு வழி) பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் சொத்தாக அங்கீகரிக்க பழைய 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் அனுமதிக்கும் நிலையில், இந்த வாதத்தை மத்திய அரசு முன்வைத்தது.

முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி 72 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில், 5 மனுக்களைத் தெரிவு செய்த உச்சநீதிமன்றம், மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள 3 நடைமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து விசாரித்து வருகிறது.

அதாவது, வக்ஃப் என நீதிமன்றங்களால் அறிவிக்கப்பட்ட சொத்துகள், மரபுவழிப் பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் சொத்துகளாக அறிவிக்கப்பட்ட அல்லது பத்திரத்தின்படி வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துகளை ரத்து செய்வதற்கு திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரம்.

பதவி வழி உறுப்பினா்களைத் தவிர வக்ஃப் வாரியங்கள் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலின் பிற அனைத்து உறுப்பினா்களும் முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்ற மனுதாரா்களின் கோரிக்கை.

வக்ஃப் சொத்து அரசு நிலமா என்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொள்ளும்போது, அது வக்ஃப் சொத்தாக கருதப்படாது என்று கூறும் விதி ஆகிய மூன்று விஷயங்கள் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், ‘ஒவ்வொரு சட்டத்துக்கும் ஆதரவாக அரசமைப்புச் சட்டத்தின் அனுமானம் உள்ளது. எனவே, இடைக்கால உத்தரவை எதிா்நோக்கும் மனுதாரா்கள், இந்த விவகாரத்தில் வலுவான, வெளிப்படையான வாதத்தை முன்வைக்க வேண்டும். இல்லையெனில், அரசமைப்புச் சட்ட அனுமானத்தின் அடிப்படையில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டம் செல்லத்தக்கதாகவே கருதப்படும்’ என்று குறிப்பிட்டது.

இஸ்லாத்தின் இன்றியமையாத பகுதி அல்ல: இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் வாதத்தை முன்வைத்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘அரசு நிலத்தின் மீது யாரும் உரிமை கோர முடியாது. வக்ஃப் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது அரசு நிலமாக இருந்தால் அதை அரசு மீட்டெடுக்கலாம் என உச்சநீதிமன்றமும் ஏற்கெனவே தீா்ப்பளித்திருக்கிறது. எனவே, நீண்டகால பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அரசு நிலமாக இருந்தால் அதை மீட்டெடுப்பதற்கு அரசுக்கு சட்டபூா்வ அதிகாரம் உள்ளது.

அதோடு, ‘வக்ஃப்’ என்பது ஓா் இஸ்லாமிய கருத்துதான். அது இஸ்லாத்தின் இன்றியமையாத பகுதி அல்ல; மாறாக, ஈகை அல்லது தா்மம் சாா்ந்தது மட்டுமே. இந்த ஈகையும் தா்மமும் அனைத்து மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதற்காக, அதை மதத்தின் அத்தியாவசிய கோட்பாடாகக் கருத முடியாது.

நீண்டகால பயன்பாட்டு அடிப்படையில் வக்ஃப் என்பது அடிப்படை உரிமை அல்ல. அது சட்டத்தின் ஓா் உருவாக்கம்தான். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் இதுபோன்ற சட்ட உருவாக்கங்களையும் ரத்து செய்ய முடியும்.

மேலும், ‘மாநில அரசுகள், மாநில வக்ஃப் வாரியங்களுடனான கலந்தாலோசனைக்குப் பிறகு நாடாளுமன்ற கூட்டுக் குழு சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

எனவே, பதிவு செய்யப்படாத நீண்ட கால பயன்பாட்டு அடிப்படையிலான வக்ஃப் சொத்துகள் ரத்து தொடா்பான விதிக்கு இடைக்கால தடை விதிப்பது, திருத்தச் சட்டத்தின் நோக்கத்தையே நீா்த்துப்போகச் செய்துவிடும்’ என்று அவா் குறிப்பிட்டாா்.

அப்போது, வக்ஃப் சொத்து அரசு நிலமா என்பதை மாவட்ட ஆட்சியா் அந்தஸ்துக்கு மேம்பட்ட அதிகாரி தீா்மானிக்க முடியும் என்ற திருத்தச் சட்ட நடைமுறை மீதான மனுதாரா் தரப்பு வாதத்துக்கு மத்திய அரசுத் தரப்பில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் அமா்வு குறிப்பிட்டது.

இதற்குப் பதிலளித்த துஷாா் மேத்தா, ‘மனுதாரரின் அந்த வாதம் தவறானது. நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சி’ என்றாா்.

இந்த வாதத்தைத் தொடா்ந்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

முன்னதாக, திருத்தச் சட்டத்தை வலுவாக ஆதரித்து மத்திய அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘வக்ஃப் என்பது இயல்பிலேயே ஓா் மதச்சாா்பற்ற கருத்து. மேலும், மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக அரசமைப்புச் சட்ட அனுமானம் உள்ளது. எனவே, அதற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது’ என்று குறிப்பிட்டது.

உலகப் புகழ்பெற்ற மைசூர் பாக் - `மைசூர் ஸ்ரீ’ எனப் பெயர் மாற்றம்! ஏன்?

இனிப்புகளில் அதிகளவிலான விரும்பிகளைக் கொண்ட மைசூர் பாகின் பெயரை, ராஜஸ்தானின் இனிப்புக்கடைகள் பெயர் மாற்றம் செய்துள்ளது.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அந்நாட்டின் மீது இந்தி... மேலும் பார்க்க

கன்னட மொழிப் பிரச்னை.. அலுவலகத்தை புணேவுக்கு மாற்றுகிறேன்: தொழிலதிபர் பதிவு

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் கௌஷிக் முகர்ஜி, தான் இந்த மொழிப் பிரச்னையில் சிக்க விரும்பவில்லை என்றும், தனது அலுவலகத்தை புணேவுக்கு மாற்றவிருப்பதாகவும் தெரிவித்திருப்பது பரபர... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு இப்படியொரு வரவேற்பா?

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 7 பேர் பிணையில் விடுதலையான நிலையில், கார், இசை என பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு பிரதமரின் பதில்தான் ஆபரேஷன் சிந்தூர்: அமித் ஷா பாராட்டு

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆ... மேலும் பார்க்க

மழையால் நின்ற இந்து திருமணம்.. முஸ்லிம் திருமண நிகழ்ச்சியில் நடைபெற்ற ஆச்சரியம்!

புணேவின் வான்வொரி பகுதியில், திறந்தவெளியில் நடைபெறவிருந்த இந்து திருமணச் சடங்குகள் கனமழையால் நின்றுபோன நிலையில், முஸ்லிம் குடும்பத்தினர், தங்களது திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபத்தில் இடம்கொடுத்து உதவ... மேலும் பார்க்க

அம்மா.. நான் சிப்ஸ் பேக்கெட் திருடவில்லை.. 13 வயது சிறுவனின் தற்கொலை கடிதம்

பன்ஸ்குரா: மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பேக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க