``நாங்கள் அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க காரணம்..'' - IMF சொன்ன விளக்கம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடந்து கொண்டிருந்த சமயத்தில், பாகிஸ்தானுக்கு இரண்டாம் கட்ட கடன் தவணையான 1 பில்லியன் டாலரை விடுவித்தது சர்வதேச நாணய நிதியம் (IMF). இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
இந்தியாவின் எதிர்ப்பிற்கு பதில் சொல்லும் விதமாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக் பேசியுள்ளதாவது...

"நாங்கள் இரண்டாம் கட்டக் கடனை வழங்க பாகிஸ்தானுக்கு விதித்து இருந்த அனைத்து நிபந்தனைகளையும் பாகிஸ்தான் அரசு நிறைவேற்றியிருந்தது. மேலும், சில துறைகள் முன்னேற்றமும் அடைந்திருந்தது. அதனால் தான், நாங்கள் அடுத்த கட்ட கடன் தொகையை விடுவித்தோம்.
கடனுக்கான முதல் மதிப்பாய்வு 2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி, சர்வதேச நாணய நிதியமும், பாகிஸ்தான் அதிகாரிகளும் கடனின் முதல் மதிப்பாய்வு சம்பந்தமான ஒரு ஒப்பந்தந்தை மேற்கொண்டனர்.
அந்த ஒப்பந்தம் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், அதன் மதிப்பாய்வு மே 9-ம் தேதி முடிந்தது. அதன் விளைவாகத் தான், அப்போது பாகிஸ்தானுக்கு கடன் தொகை விடுவிக்கப்பட்டது.
இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையைப் பொறுத்தவரை, அந்தத் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு வருத்தங்களும், அனுதாபங்களும். இந்தப் பிரச்னை அமைதியாக தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.