`அபராதம் செலுத்தும் தவறுக்கு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதா?'- சவுக்கு சங்கர் காட...
மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்!
நாமக்கலில் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரைப் பிடித்து வெள்ளிக்கிழமை போலீஸாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர்.
ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில், ஈரோட்டில் புறப்பட்ட அரசுப் பேருந்தை நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் நவீன்ராஜ் (28) என்பவர் ஓட்டி வந்தார்.
இப்பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த நிலையில், மதுபோதையில் இருந்த ஓட்டுநர் நவீன்ராஜ், பேருந்தை கட்டுப்பாடு இல்லாமல் இயக்கியதைக் கண்டு பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். நடத்துநர் கண்டித்த போதும் அவர் கேட்கவில்லை.

நாமக்கல் அருகே எர்ணாபுரம் பகுதியில் பேருந்து வந்த போது, பயணிகள் அனைவரும் ஓட்டுநரைத் தாக்க முயன்றதையடுத்து, சாலையின் நடுவில் உள்ள சுவர் மீது மோதி பேருந்தை நிறுத்தினார்.
இதனையடுத்து, நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், ஓட்டுநரைப் பிடித்து மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மாற்று பேருந்து மூலம் பயணிகள் நாமக்கலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசுப் போக்குவரத்துக் கழக நாமக்கல் பணிமனை கோட்ட மேலாளர் செங்கோட்டுவேல் விசாரணை மேற்கொண்டுள்ளார். நவீன்ராஜ், ஓட்டுநர் பணியில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆனது குறிப்பிடத்தக்கது.