சேலம் ரயில் நிலையத்தில் உள்கூரை விழுந்தது! பயணிகள் தப்பினர்!
சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் உள்கூரை (ஃபால்ஸ் சீலிங்) திடீரென விழுந்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முக்கிய ரயில் நிலையங்களை தேர்வு செய்து அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு வருகிறது
இதன் அடிப்படையில் சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
இதன் அடிப்படையில், சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் முன்பு பெரிய அளவில் உள்கூரை வடிவமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டிருந்தது. பொது மக்களின் பயன்பாட்டில் இருந்த இந்தப் பகுதி இன்று(மே 23) மாலை வீசிய சூறாவளி காற்றால் திடீரென பயங்கர சட்டத்துடன் உள்கூரை கீழே விழுந்தது. இதனால் அருகில் இருந்த பயணிகள் ஓட்டம் பிடித்தனர்
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு அந்தப் பகுதியில் யாரும் நுழையாதவாறு தடை விதித்தனர். தொடர்ந்து விழுந்த உள்கூரையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது
சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்கூரை விழுந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள பயணிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்த 23 குளிர்சாதனப் பேருந்துகள்!