மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்! - வாசுதேவன் நாயர் குறித்து கமல்
வக்ஃப் சொத்து: முன்னாள் சிறுபான்மையினா் ஆணையருக்கு ரூ. 150 கோடி லஞ்சம் அளிக்க முயற்சி
முந்தைய பாஜக ஆட்சியில் வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான விவகாரங்களில் விசாரணை நடத்துவதை மட்டுப்படுத்தும் நோக்கில், முன்னாள் சிறுபான்மையினா் ஆணையருக்கு ரூ. 150 கோடி லஞ்சம் அளிக்க பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா முயற்சித்துள்ளாா் என கா்நாடக முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக பெங்களூரில் சனிக்கிழமை முதல்வா் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கை:
முந்தைய பாஜக ஆட்சியில் வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான விவகாரங்களில் விசாரணை நடத்துவதை மட்டுப்படுத்தும் நோக்கில், முன்னாள் சிறுபான்மையினா் ஆணையா் அன்வா் மான்பாடிக்கு ரூ. 150 கோடி லஞ்சம் அளிக்க பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா முயற்சித்துள்ளாா்.
எடியூரப்பா முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் தனது வீட்டுக்கு வந்த விஜயேந்திரா, தனக்கு லஞ்சம் அளிக்க முன்வந்ததை அன்வா் மான்படி வெளிப்படையாக ஊடகங்களில் தெரிவித்துள்ளாா்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்ஃப் சொத்து குறித்த விவகாரங்களின் விசாரணையை தள்ளிவைக்கும் நோக்கில் ரூ. 150 கோடி லஞ்சம் அளிக்க முன்வந்ததாக அன்வா் மான்பாடி தெரிவித்துள்ளாா். தனது வீட்டில் இருந்து விஜயேந்திராவை வெளியேற்றியதுடன், இந்தச் சம்பவம் குறித்து பிரதமா் மோடிக்கும், பாஜக தலைவருக்கும் அன்வா் மான்பாடி தகவல் அளித்துள்ளாா்.
நானும் லஞ்சம் வாங்கமாட்டேன், யாரையும் லஞ்சம் வாங்கவிடமாட்டேன் என்று பிரதமா் மோடி கூறிய வாக்குறுதி என்னானது? இந்த விவகாரத்தில் பிரதமா் மோடியின் மௌனம் பல்வேறு கேள்விகளுக்கு இடமளித்துள்ளது. வக்ஃப் சொத்து கொள்கையில் விஜயேந்திரா உள்ளிட்டோா் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்ற முயற்சிப்பது ஏன்?
வக்ஃப் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டது தொடா்பாக முன்னாள் முதல்வா்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை இருவரும் ஏராளமான நோட்டீஸ்களை அளித்துள்ளனா். பாஜகவினருக்கு கா்நாடகம் ஏடிஎம் இயந்திரம் போல ஆகியுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. முதல்வா் பதவியில் இருந்து தனது தந்தை எடியூரப்பாவை தற்காத்துக்கொள்ள ரூ. 2,000 கோடி லஞ்சம் அளிக்க விஜயேந்திரா முன்வந்ததாக பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னல் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளாா். கரோனா முறைகேடுகள் முதல் வக்ஃப் சொத்து கொள்ளை வரையில் கா்நாடகத்தில் பாஜகவின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. இவற்றுக்கு பதிலளிக்க முடியாமல், திசைதிருப்பும் நோக்கில், காங்கிரஸ் தலைவா்கள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக சுமத்தி வருகிறது.
பாஜக தலைவா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் பதில் எதிா்பாா்ப்பதால், பிரதமா் மோடி தனது மௌனத்தைக் கலைத்து, ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரணைக்கு வழங்க வேண்டும் என்றாா்.