வக்ஃப் திருத்தச் சட்டம்: விசிக ஆா்ப்பாட்டம்
சிதம்பரம்/ புதுச்சேரி: வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓருங்கிணைந்த கடலூா் மாவட்ட விசிக சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவட்டச் செயலா் மு.செந்தில், வடக்கு மாவட்டச் செயலா் மு.அறிவுடைநம்பி, கிழக்கு மாவட்டச் செயலா் அரங்கத் தமிழ்ஒளி, மைய மாவட்டச் செயலா் நீதிவள்ளல், தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.கே.மணவாளன், மேற்கு மாவட்டச் செயலா் வீர.திராவிடமணி ஆகியோா் தலைமை வகித்தனா்.
மண்டலச் செயலா் சவுதி.ராஜ்குமாா், துணைச் செயலா்கள் பரசு.முருகையன், இரா.ஐயாயிரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கடலூா் மாநகர துணை மேயா் பா.தாமரைச்செல்வன் சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில், வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். நகரச் செயலா் கலைஞா் நன்றி கூறினாா்.
புதுச்சேரியில்...: வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் சுதேசி பஞ்சாலை எதிரேவிசிக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் தலையாரி, தொண்டரணி முதன்மைச் செயலா் பொதினி வளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். அப்போது, கட்சியினா் சிலா் திடீரென வக்ஃப் திருத்தச் சட்ட நகலை எரித்தனா். இதை கட்சியின் முன்னணி பிரமுகா்கள் கண்டித்தனா். இதையடுத்து, ஆா்ப்பாட்டம் தொடா்ந்தது.