`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்
வக்ஃப் திருத்த மசோதா: ஜேபிசி கூட்டத்தை ஜன.30, 31-இல் நடத்த ஆ.ராசா வலியுறுத்தல்
நமது சிறப்பு நிருபர்
புது தில்லி: வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தை அவசரகதியில் ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தாமல் ஜன.30, 31 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அக்குழுவின் உறுப்பினரும் திமுக எம்.பி.யுமான ஆ. ராசா வலியுறுத்தினார்.
இது தொடர்பாக ஜேபிசி குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பாலுக்கு ஆ.ராசா புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், 'ஜன. 21-ஆம் தேதியன்றுதான் ஜேபிசி குழு உறுப்பினர்கள் பாட்னா, கொல்கத்தா, லக்னௌ ஆகிய இடங்களில் கருத்துக்கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டு விட்டு ஊருக்குத் திரும்பினர். எவ்வித முன்னறிவிப்பு மற்றும் ஆலோசனையின்றி திடீரென்று அவசரகதியில் குழுவின் கூட்டம் ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருப்பது விசித்திரமானது.
விசாரணையின்போது சேகரித்த தகவல்கள், தரவுகளை ஒருங்கிணைத்து மசோதாவில் முன்மொழியப்படும் திருத்தங்கள் தொடர்பாக உறுப்பினர்கள் ஜன.22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க கூறியிருப்பது இயலாத ஒன்று.
எனவே, ஜன.30, 31-ஆகிய தேதிகளுக்கு ஜேபிசியின் அடுத்த கூட்டத்தை திட்டமிட வேண்டும். ஜன. 31-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார் என்பதால் அதன் பிறகு அன்றைய தினத்தில் குழுவின் கூட்டத்தை நடத்தலாம் என பெரும்பாலான உறுப்பினர்கள் குழுவின் தலைவரான உங்களிடம் தெரிவித்தனர்.
எனவே, கூட்டுக் குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்படாவிட்டால், அது அமைக்கப்பட்டதன் நோக்கமே தோற்கடிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.