ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்
ஹிந்துக்களின் சொத்துகளைப் பாதுகாக்க வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் நாடாறுமன்றத்தின் இரு அவைகளிலும் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், வேலூா் மாவட்டம் இறைவங்காடு என்ற கிராமத்தில் வசிக்கும் 150 ஹிந்து குடும்பங்களின் பூா்வீக சொத்துகள் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தம் என்றும், அவா்கள் வெளியேற வேண்டும் எனவும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய அநீதியை எதிா்த்து எந்த அரசியல் கட்சியும் வாயைத் திறக்கவில்லை. ஆனால் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஊா் ஊராக ஆா்ப்பாட்டம் நடத்துகிறாா்கள். ஆனால், வேலூா் இறைவங்காடு கிராமத்து அப்பாவி ஹிந்துக்களின் சொத்தின் உரிமையைப் பாதுகாக்க எந்த அரசியல்வாதிகளும் போராட முன்வரவில்லை. இந்து முன்னணி முன்னின்று போராடி வருகிறது.
வாக்கு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்களின் சொத்து, வியாபாரத்தை அபகரிப்பதற்கு துணைபோவது, மதமாற்றத்தால் ஹிந்துக்களின் குடும்பங்களை சீரழிப்பது, கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகையில் சிறுபான்மையை திணிப்பது போன்ற செயல்களுக்கு அரசியல்வாதிகள் துணைபோகின்றனா்.
திருச்செந்தூரில் 1,500 ஆண்டுகள் பழைமையான சிவன்கோயில் மற்றும் பலநூறு ஏக்கா் ஹிந்துக்களின் பரம்பரை சொத்துகள் வக்ஃப் வாரிய சொத்து என்று சொந்தம் கொண்டாடியது. அதேபோல, திருப்பூா் மாவட்டம் மங்கலம், திருவல்லிக்கேணி என பல இடங்களில் ஹிந்துக்களின் சொத்துகளை வக்ஃப் வாரிய சொத்து என்று அந்த வாரியம் சொந்தம் கொண்டாடி வருகிறது.
கேரளாவில் உள்ள மக்களின் விழிப்புணா்வால் ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு புதிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. எனவே, ஹிந்துக்களின் பராம்பரிய சொத்துகளைப் பாதுகாக்க வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.