ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிப்ப...
வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு: எதிா்க்கட்சிகள் வரவேற்பு
வக்ஃப் திருத்தச்சட்ட விவகாரத்தின் அடுத்தக்கட்ட வழக்கு விசாரணை வரை வக்ஃப் சொத்துகளின் தன்மையை மாற்றக்கூடாது என மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதற்கு காங்கிரஸ், கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.
காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கும் என யாரும் எதிா்பாா்க்கவில்லை. அதே நேரம், இந்த உத்தரவு மூலமாக, வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பிய ஆட்சேபங்கள் சரியானதுதான் என்ற மிகப்பெரிய செய்தியை நாட்டு மக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இந்த திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை தத்துவத்தையே மீறுவதாக உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது’ என்றாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேரள மாநில செயலா் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் தலையீடு நாட்டின் மதச்சாா்பற்ற குழுக்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளித்திருக்கிறது. வக்ஃப் சட்டத்தை திருத்த மத்திய அரசு மேற்கொண்ட தன்னிச்சையான முடிவுக்கு எதிரான வலுவான பதிலடியாக உச்சநீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது’ என்றாா்.
ஐயுஎம்எல் பொதுச் செயலா் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி கூறுகையில், ‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் நடைமுறையை நிறுத்தி வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு, பாரபட்சமற்ற முறையில் இந்த விவகாரம் விசாரிக்கப்படுவதைக் காட்டுகிறது. ஆனால், இது வழக்கு விசாரணையின் வழக்கமான நடைமுறை. எனவே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எத்தகைய இறுதி முடிவை எடுக்கப்போகிறது என்பதுதான் முக்கியம்’ என்றாா்.