வங்கதேசம்: சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுடன் நேரடி வர்த்தகம்!
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான அரசு அனுமதிப் பெற்ற நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் துவங்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் குறித்த பேச்சு வார்த்தையின்போது, 2025 பிப்ரவரி மாதத் துவக்கத்தில் பாகிஸ்தானிடமிருந்து சுமார் 50,000 டன் அரிசியை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் வங்கதேசம் கையெழுத்திட்டது.
அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதல் முறையாக அரசின் சரக்குகளை ஏற்றிக்கொண்டு பாகிஸ்தான் தேசிய கப்பல் கழகத்தின் (PNSC) கப்பல் ஒன்று வங்கதேசத்தின் துறைமுகத்தை அடையவுள்ளதாகவும், இது கடல்சார் வர்த்தக உறவுகளை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பாகிஸ்தானிலிருந்து 50,000 டன் அரிசியானது இரண்டு கட்டமாக வங்கதேசத்திற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், அதன் 2 ஆம் கட்ட இறக்குமதி சுமார் 25,000 டன் அரியுடன் மார்ச் மாதத் துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: தடையை நீக்கிய தலிபான்கள்! மீண்டும் இயங்கும் பெண்கள் வானொலி நிலையம்!
முன்னதாக, பாகிஸ்தானின் ஓர் அங்கமாக கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட மாகாணம் கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வெற்றி பெற்று வங்கதேசம் எனும் சுதந்திர நாடாக உருவானது. அதற்கு பிறகு, முதல் முறையாக, அதிகாரப்பூர்வ வர்த்தக உறவுகள் மீட்டெடுக்கப்பட்டு, இந்த வர்த்தகப் போக்குவரத்து அமைந்துள்ளது.
மேலும், இந்த புதிய வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் எனவும் நேரடி கப்பல் போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு பிறகு பாகிஸ்தான் வங்கதேசத்திற்கு இடையிலான உறவு மேம்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.