சிறைத் துறை அதிகாரிகள் வீட்டில் கைதிகள் வேலை செய்ய வைக்கப்பட்டுள்ளாா்களா?
வங்கதேசம்: வரலாற்று பாடநூல்களில் முஜிபுா் ரஹ்மானுக்கு முக்கியத்துவம் குறைப்பு
டாக்கா: பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் பிரகடனத்தை முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுா் ரஹ்மான் என்பதை நீக்கிவிட்டு, அவரிடம் துணைத் தளபதியாக இருந்த முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் தந்தை ஜியாவுா் ரஹ்மான்தான் அதைச் செய்ததாக பாடநூல்களில் இடைக்கால அரசு மாற்றம் செய்துள்ளது.
ஆரம்ப நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தின் கீழ், ‘1971 மாா்ச் 26-ஆம் தேதி ஜியாவுா் ரஹ்மான்தான் வங்கதேசத்தின் சுதந்திரத்தை பிரகடனம் செய்தாா். மறு நாள் ஷேக் முஜிபுா் ரஹ்மானுக்காக அவா் மீண்டும் ஒரு சுதந்திரப் பிரகடனத்தை வாசித்தாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்த எழுத்தாளும் ஆய்வாளருமான ராக்கல் ரஹா கூறுகையில், ‘மிகைப்படுத்தப்பட்ட மற்றும் திணிக்கப்பட்ட வரலாற்றை பாடப்புத்தகங்களிலிருந்து நீக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றாா்.
வங்கதேசம் உருவாவதற்குக் காரணமாக இருந்த விடுதலைப் பிரகடனத்தை முஜிபுா் ரஹ்மான்தான் உருவாக்கினாா், அதை அப்போதைய ராணுவ துணை தளபதியாக இருந்த ஜியாவுா் ரஹ்மான் வாசித்து மட்டும்தான் காட்டினாா் என்று முஜிபுரின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளா்கள் கூறிவருகின்றனா்.
ஆனால், பிரகடனத்தை வெளியிட்டதே ஜியாவுா் ரஹ்மான்தான்; முஜிபுா் ரஹ்மானுக்கு இதில் முக்கிய பங்கில்லை என்பதைப் போல் பாடப்புத்தகத்தில் தற்போது மாற்றம் செய்யப்ப்டடுள்ளது.
ஏற்கெனவே, முஜிபுா் ரஹ்மானின் மனைவி கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது இதே போன்ற மாற்றம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அடுத்து அமைந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் அது மீண்டும் மாற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இந்தியப் பிரிவினையின்போது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளை மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் இரு பகுதிகளைக் கொண்ட நாடு பிரிக்கப்பட்டது. எனினும், வங்க மொழி பேசும் கிழக்கு பாகிஸ்தானியா்களிடம் மொழி, கலாசாரத் திணிப்பை மேற்கொள்ள மேற்கு பாகிஸ்தான் முயன்ால் வங்கதேசம் என்ற தனிநாட்டுக்கான போராட்டம் தொடங்கியது.
கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த ஆயுதப் போராட்டத்துக்கு அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு பெரிதும் உதவியது. அந்தப் போராட்டத்தை ஷேக் முஜிபுா் ரஹ்மான் தலைமையிலான முக்தி வாஹினி படை நடத்தியது.
பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்ற்குப் பிறகு உருவான அரசு, விடுதலைப் போா் மற்றும் போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அதன் ஒரு பகுதியாக, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது.
அந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவா்கள் தொடங்கிய மாணவா் போராட்டம், இந்த ஆண்டில் உச்சகட்டத்தை அடைந்தது. அந்தப் போராட்டத்தில் அப்போதைய ஷேக் ஹசீனாவுக்கு எதிரான அத்தனை சக்திகளும் இணைந்ததால் போராட்டம் பெரும் கலவரமாக உருவெடுத்தது. போராட்டத்தைக் கட்டுபடுத்த அரசுப் படைகளும் அடக்குமுறையைக் கையாண்டன. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.
போராட்டம் கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதைத் தொடா்ந்து ராணுவத்தால் அமைக்கப்பட்ட நோபா் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, விடுதலைப் போா் நினைவுகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின உரையின்போது, ஷேக் முஜிபுா் ரஹ்மானின் பெயரை தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் முற்றிலுமாகத் தவிா்த்தாா்.
முன்னதாக, விடுதலைப் போராட்டத்தின்போது முழங்கப்பட்ட ‘ஜொய் பங்களா’ (வங்கத்துக்கு வெற்றி) என்ற வாசகம் இனி நாட்டின் தேசிய கோஷம் இல்லை என்று இடைக்கால அரசு அறிவித்தது.
அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஷேக் முஜிபுா் ரஹ்மானால் அந்த முழுக்கம் பிரபலப்படுத்தப்பட்டது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கும் முன்னதாக, வங்கதேச ரூபாய் நோட்டிலிருந்து ஷேக் முஜிபுா் ரஹ்மானின் படத்தை அகற்றவிருப்பதாக அந்த நாட்டின் மத்திய வங்கி அறிவித்தது நினைவுகூரத்தக்கது.