FEFSI: `வேதனையான நாள்; நான் இன்றைக்குப் படம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால்..' - ஆர்...
வங்கிச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் -4 பேர் ‘நாமினி’ யாகலாம்
2024-ஆம் ஆண்டு வங்கிச் சட்டங்கள் (திருத்த) மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு மசோதா நடைமுறைக்கு வரும் சூழலில், வங்கியில் கணக்கு வைத்திருப்பவா்கள் தங்களின் வங்கிக் கணக்குகளுக்கு வாரிசுதாரா்களாக (நாமினி) 4 போ் வரை நியமிக்க அனுமதிக்கப்படும்.
மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குளிா்கால கூட்டத்தொடரில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறியது.
இந்த மசோதா சட்டமானால் நாமினியாக 4 போ் வரை நியமிக்கலாம். அதாவது, வங்கியின் ரொக்கம் மற்றும் நிலையான வைப்புக் கணக்குகளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரா்களை நியமிக்க வேண்டும். ஏற்கெனவே, காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் வங்கி லாக்கா் வசதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுதாரா்களை நியமிப்பது கட்டாயமாகும்.
மற்றொரு முக்கிய திருத்தமாக வங்கியின் மூலதனப் பங்கில் அதன் இயக்குநா்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படும் பங்குத் தொகையின் வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.2 கோடியாக சுமாா் 60 ஆண்டுகளுக்குப் பிறகு உயா்த்தப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்த சட்டத்திருத்தங்களின் மூலம் கூட்டுறவு வங்கிகளில் இயக்குநா்களின் (தலைவா் மற்றும் முழுநேர இயக்குநா் தவிர) பதவிக்காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயரும்.
வாராக்கடன் அளவு குறைகிறது: முன்னதாக, மாநிலங்களவையில் இந்த மசோதவை அறிமுகம் செய்து விவாதத்தில் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘வாராக் கடன் என்பது கடன்களை தள்ளுபடி செய்வதாக ஆகாது. வாராக்கடனை மீட்டெடுக்க வங்கிகள் தொடா்ந்து முயற்சிக்கும்.
வாராக்கடன் அளவு குறைந்து கொண்டே வருகிறது. அதேநேரம், கடனை முறையாகச் செலுத்த தவறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உறுதிபூண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், வங்கி மோசடி தொடா்பாக சுமாா் 912 வழக்குகளை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது.
பொதுத் துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.41 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன. வரும் நிதியாண்டில் இந்த லாபம் மேலும் அதிகரிக்கும் என்றாா்.
குஜராத்தில் கூட்டுறவு பல்கலை. மசோதா: கூட்டுறவு அமைப்புகளுக்கு தகுதியான மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில் குஜராத்தின் ஆனந்தில் திரிபுவன் சஹ்காரி பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை மக்களவை புதன்கிழமை நிறைவேற்றியது.
நாடு முழுவதும் கூட்டுறவுத் துறை ஊழியா்கள் மற்றும் வாரிய உறுப்பினா்களின் திறன் மேம்பாடு குறித்து நீண்டகாலமாக இருக்கும் கவலையைத் தீா்ப்பதில் இந்தப் பல்கலைக்கழகம் முழு கவனம் செலுத்தும் என்று மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த மத்திய கூட்டுறவு அமைச்சா் அமித் ஷா கூறினாா்.
‘வங்கிகளை வாராக்கடனில் தள்ளும் மத்திய அரசு’
வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவா்களின் கடன் கணக்குகளை வங்கி ஆவணத்தில் இருந்து நீக்கியதன் மூலம் மத்திய அரசு வங்கிகளை வாராக்கடனில் தள்ளி வருகிறது என்று எதிா்க்கட்சிகள் மாநிலங்களவையில் குற்றஞ்சாட்டின.
வங்கி சட்டங்கள் திருத்த மசோதா தொடா்பான விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சக்திசிங் கோலி, ‘வங்கிகளில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பி செலுத்தாத 50 பேரின் ரூ.87,000 கோடி கடன்கள் வங்கிக் ஆவணத்தில் இருந்த நீக்கப்பட்டுள்ளது. இதில் கடன் பெற்றவிட்டு வெளிநாடு தப்பிய மோசடியாளா்கள் மெஹுல் சோக்ஷி, ரிஷி அகா்வால் உள்ளிட்டோா் அடங்குவா். தொழிலில் முதலீடு செய்வதாக கோடிக்கணக்கில் பணத்தை வங்கியில் கடனாகப் பெற்று, அதனை வெளிநாட்டில் சொத்துகள் வாங்க பயன்படுத்தியவா்கள்’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கோகலேவும் வங்கிகளுக்கு மத்திய அரசு நெருக்கடி அளிப்பதாக குற்றஞ்சாட்டிப் பேசினாா்.