Shreyas Iyer: 'இந்திய டி20 அணியில் இடம்பெற ஸ்ரேயஸ் வேறு என்ன செய்ய வேண்டும்?' - ...
வங்க மொழியில் பேசிய கொல்கத்தா மாணவர்கள்; `பங்களாதேஷ் பிரஜைகள்' எனக் கூறி தாக்கிய வியாபாரிகள்!
சமீப காலமாக பங்களாதேஷ் பிரஜைகளுக்கு எதிராக சில மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பை போன்ற நகரங்களில் திடீரென ரெய்டு நடத்தி பங்களாதேஷ் பிரஜைகளை கைது செய்து நாடு கடத்தும் சம்பவங்களும் நடக்கிறது. வங்காள மொழி பேசினாலே அவர்கள் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்று கருதி அவர்களை தாக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. சென்னையில் கூட அது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. இந்நிலையில் வங்காள மொழி பேசிய மேற்கு வங்க மாணவர்கள் அவர்களின் சொந்த ஊரிலேயே பங்களாதேஷ் பிரஜைகள் என்று கூறி தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இச்சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் கொல்கத்தாவில் நேற்று இரவு சீல்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே இருந்த நடைபாதை கடையில் மொபைல் கவர் வாங்குவதற்காகச் சென்றார்.

அவர் வங்காள மொழியில் பேசியதாக தெரிகிறது. உடனே அங்குள்ள வியாபாரி ஒருவர், நீ பங்களாதேஷை சேர்ந்தவனா என்று கேட்டு அடித்துள்ளார். உடனே அந்த மாணவர் அந்த இடத்தில் இருந்து சென்று மேலும் சில மாணவர்களை அழைத்து வந்தார். ஆனால் அதற்குள் அந்த இடத்தில் இந்தி மொழி பேசும் மேலும் சில வியாபாரிகள் ஒன்று சேர்ந்தனர்.
அவர்கள் அனைவரும் மாணவர்களை சூழ்ந்து கொண்டு அவர்களிடம் இந்தியில் பேசும்படி கூறினர். ஆனால் அவர்கள் இந்தியில் பேசவில்லை. வங்காள மொழியில் பேசியதால் இந்தி பேசும் வியாபாரிகள் அவர்களை நீங்கள் பங்களாதேசை சேர்ந்தவர்கள் என்று கூறி திட்டினர். மாணவர்கள் நங்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் வங்காளத்தில்தான் பேசுவோம் என்று சொன்னார்கள். இதனால் அவர்களை இந்தி பேசும் வியாபாரிகள் நீங்கள் பங்களாதேஷ் பிரஜைகள் என்று தொடர்ந்து திட்டினர். இதனால் மாணவர்கள் அங்கிருந்து தங்களது விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அவர்களை வியாபாரிகள் ஹாக்கி மட்டை , இரும்பு கம்பி, கம்பு மற்றும் கத்தியால் பின்னால் இருந்து தாக்கினர். இதில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக அவர்கள் போலீஸ் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தனர். அதோடு குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று கோரி மாணவர்கள் போலீஸ் நிலையத்திற்கு எதிரில் போராட்டம் நடத்தினர். இது குறித்து தாக்குதலில் காயம் அடைந்த அக்தர் என்ற மாணவர் கூறுகையில், ``நாங்கள் எங்களது சக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்கும்படி வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்காமல் எங்களிடம் இந்தியில் பேசும்படி கூறினர்.
ஆனால் நாங்கள் மேற்கு வங்கத்தில் வங்காள மொழிதான் பேசுவோம் என்று கூறினோம். உடனே அவர்கள் எங்களை பார்த்து பங்களாதேஷ் பிரஜைகள் என்று கூறினர். அவர்களோடு மற்ற வியாபாரிகளும் சேர்ந்து கொண்டனர். உடனே நாங்கள் அங்கிருந்து விடுதிக்கு புறப்பட்டோம். அவர்கள் கம்பு, ஹாக்கி மட்டையால் எங்களை பின்னால் இருந்து தாக்கினர். அவர்கள் கத்தியும் வைத்திருந்தனர். அவர்களது தாக்குதலில் நாங்கள் நான்கு பேர் காயம் அடைந்தோம்'' என்று தெரிவித்தார்.
கொல்கத்தா போலீஸார் கூறுகையில், “கொல்கத்தா பல்கலைக்கழக மாணவர்கள் நள்ளிரவில் முச்சிபாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். காயமடைந்தவர்கள் மற்றும் மாணவர்களின் வாக்குமூலங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடந்து வருகிறது. நள்ளிரவில் கடைகள் அடைக்கப்பட்டுவிட்டதால், குற்றம்சாட்டப்பட்ட கடைக்காரர்களிடம் விசாரிக்க முடியவில்லை. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் இன்று விசாரிக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்தனர்.