மதுரை எஸ்.ஆலங்குளம்: `வீட்டுக்கு வெளிய சாக்கடை இருக்கலாம்; வீடே சாக்கடையா இருந்த...
உத்தரகாண்ட்: ஹோம்வெர்க் செய்யாததால் அடித்த ஆசிரியர்; கோவத்தில் துப்பாக்கியால் சுட்ட மாணவன்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் 9வது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னை வகுப்பறையில் அடித்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். அங்குள்ள குருநானக் பள்ளியில் அந்த மாணவன் 9வது வகுப்பு படித்து வருகிறான்.
அம்மாணவனை இயற்பியல் ஆசிரியர் ககன்தீப் வகுப்பறையில் அடித்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மாணவன் சரியாகப் பதிலளிக்காத காரணத்தால் அவனை அடித்ததோடு மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் திட்டி இருக்கிறார். அதோடு மாணவன் ஹோம்ஒர்க் செய்யாமல் வந்துள்ளான்.

ஆசிரியர் அடித்துத் திட்டியதால் அவரைப் பழிவாங்க முடிவு செய்த மாணவன் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தான். நேற்று ஆசிரியர் ககன்தீப் சம்பந்தப்பட்ட மாணவன் படிக்கும் வகுப்பறையில் பாடம் நடத்தி முடித்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார். அவர் வெளியில் சென்றபோது மாணவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியரைச் சுட்டான். தோட்டா ஆசிரியரின் தோள்பட்டையில் பாய்ந்தது. துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து மாணவன் தப்பி ஓடிவிட்டான்.
உடனே ஆசிரியர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து தங்களது காவலில் எடுத்துள்ளனர். மாணவனிடம் விசாரித்தபோது துப்பாக்கியைத் தனது டிபன்பாக்ஸில் மறைத்து எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளான்.
இச்சம்பவத்தால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரகாண்டில் உள்ள உத்தம்சிங் நகர்ப் பகுதி சி.பி.எஸ்.சி பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் காசிப்பூரில் மிகப்பெரிய அமைதிப்பேரணி ஒன்றையும் இன்றைக்கு நடத்தினர்.