'நீங்கள் சொல்லித்தானே ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கினோம்' - அமெரிக்காவை சாடும்...
மத்திய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: முதல்வர் ஸ்டாலின் சூளுரை!
சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்த ரகுமான்கான், திமுக கருப்பு - சிவப்பு கொடியை உயர்த்திப் பிடித்தவர் என புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம் என தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் அ. ரகுமான் கான் எழுதிய "நியாயங்களின் பயணம்", "மெளனமாய் உறங்கும் பனித்துளிகள்", "உலகமறியா தாஜ்மஹால்கள்", "பூ... பூக்கும் இலையுதிர் காலம்", "வானம் பார்க்காத நட்சத்திரங்கள்", ஆகிய 5 நூல்கள் மற்றும் "இடி முழக்கம்" அ. இரகுமான் கான் சட்டப்பேரவை பேருரைகள் ஆகிய நூல்களை வெளியீட்டு உரையாற்றினார்.
அப்போது, தந்தைக்குப் புகழ் சேர்க்கக்கூடிய தனயனாக, நம்முடைய ரகுமான்கான் நூல் வெளியீட்டு விழாவை, அவருடைய பெருமைகளைப் போற்றக்கூடிய பெருவிழாவாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய டாக்டர் சுபேர்கானுக்கு முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரகுமான்கான் சிறப்பைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், அவர் கம்பத்தில் பிறந்தவர். அந்த கம்பம் தொகுதியில் இருக்கக்கூடிய தோழர்களை நான் பார்க்கிறேன். ராமநாதபுரத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். அந்த தொகுதியில் இருந்து வந்திருக்கக்கூடிய உங்களையும் நான் பார்க்கிறேன். அதேபோல, சேப்பாக்கத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். அந்த தொகுதியில் இருந்து வந்திருக்கக்கூடிய உங்களையும் நான் பார்க்கிறேன். அவரைப் பொறுத்தவரைக்கும், தொகுதி மக்களிடத்தில் எந்தளவுக்கு அன்பை, பாசத்தைப் பெற்றிருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.
தந்தையின் சிறப்பும் - புகழும் - அறிவும் - ஆற்றலும் காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்கவேண்டும் என்று அவரால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய ஆறு நூல்களை அன்போடு நம்முடைய சுபேர்கான் கொண்டு வந்திருக்கிறார். அதை நான் மிகுந்த பாசத்தோடும், பெருமையோடும், பூரிப்போடும், மகிழ்ச்சியோடும் புலங்காகித உணர்வோடு நான் வெளியிட்டேன்.
ஏனென்றால், நம்முடைய ரகுமான்கான் பேச்சுக்கும் - எழுத்துக்கும் ரசிகன் நான்! அவர் பேசுகின்ற கூட்டங்கள் என்றால், நான் விரும்பி பங்கேற்பதுண்டு. என்னைப் பொறுத்த வரைக்கும், அவர் ஒரு ஸ்டார்! ஸ்டார் பேச்சாளர்! சட்டப்பேரவை பேச்சுக்கு ஒரு எடுத்துக்காட்டாக எவ்வளவோ விஷயங்களைச் சொல்லமுடியும். அவர் பேச்சு, சட்டப்பேரவையில் இடி முழக்கமாவும், தமிழ்நாடு முழுவதும் வெடிமுழக்கமாகவும் எதிரொலிக்கும்!
1943-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்த ரகுமான்கான், கழகத்தின் கருப்பு - சிவப்பு கொடியை உயர்த்திப் பிடித்தவர்!
இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், முன்னாள் அமைச்சர் காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், பேராசிரியர் ராமசாமி ஆகியோருடன் இணைந்து, 1965-ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, நம்முடைய பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் மறைந்த முரசொலி செல்வம் ஆகியோருடன் நெருக்கமாக பழகி, கழகத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர். இன்றைக்குக்கூட நம்முடைய துரைமுருகன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க வேண்டும். அவருடைய உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரால் வர முடியவில்லை. தலைவர் கலைஞரை பொறுத்தவரைக்கும், ஒரு திறமைசாலியை அடையாளம் கண்டார் என்றால், அவர்களை அரவணைத்து வளர்த்துவிடுவார்.
அப்படித்தான், சட்டம் படித்த பிறகு, சொந்த ஊரில், வழக்குரைஞர் தொழில் செய்ய நினைத்த ரகுமான்கானை, தலைவர் கலைஞர், நீ சென்னையில் வந்து பயிற்சி செய்ய சொல்லி அழைத்தார். அந்தப் பணியினை அவர் நிறைவேற்றினார். பிறகு மின்சார வாரியம், சென்னை மாநகராட்சி, பல்லவன் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்கு, ரகுமான்கானை வழக்குரைஞராக நியமித்தார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் அவர் திறமையாக செயல்பட்டதால், கலைஞருடன் அன்பை மட்டுமல்ல; மக்களுடைய நம்பிக்கையையும் பெற்றார்.
1977, 1980, 1984 ஆகிய தேர்தல்களில் சேப்பாக்கத்தில் இருந்தும், 1989-ல் பூங்கா நகரில் இருந்தும், 1996-ல் ராமநாதபுரத்தில் இருந்தும் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பணியையும் நிறைவேற்றினார். கலைஞர் அமைச்சரவையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து பணியாற்றினார். இரண்டு முறை சிறுசேமிப்புத் துறை துணைத்தலைவராக இருந்தார். கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக பணியாற்றியிருக்கிறார். தலைமைக் கழகச் செய்தி தொடர்புச் செயலாளராக, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராக பல்வேறு உயரங்களைப் பார்த்தவர் ரகுமான்கான். இப்படி, தன்னுடைய இறுதிமூச்சு வரைக்கும் கழகக் காவலராக இருந்தவர். இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்!
அவர் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்னால், கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழுவை ஆன்லைனில் நாம் நடத்தினோம். அந்தக் கூட்டம் முடிந்ததும், என்னிடம் வீடியோ காலில் பேசிய அவர், என்னுடைய உடல்நலத்தைப் பற்றி அக்கறையோடு கேட்டு அதை கவனித்துக் கொள்ளச் சொன்னார். பதிலுக்கு நானும் அவருடைய உடல்நலனைப் பற்றி விசாரித்தேன். சிறுபான்மை சமுதாயத்துக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் - நாட்டுக்கும் அவர் தேவை என்று சொன்னேன். அவர் கண் கலங்கிவிட்டார். ஆனால், சில நாட்களிலேயே நம் எல்லோரையும் கண்கலங்க வைத்துவிட்டு, அவர் மறைந்துவிட்டார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எத்தனையோ முறை ரகுமான்கானை தன்னுடைய கட்சிக்கு வரச்சொல்லி அழைத்தார். ஆனால், சிறிய சஞ்சலம் கூட இல்லாமல், கொள்கை உறுதியுடன் கட்சியில் இருந்தவர் ரகுமான்கான்.
ஒருமுறை அல்ல, இரண்டு முறை அவர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. அதற்கெல்லாம் பயப்படவில்லை. மற்றொருமுறை, சிலர் அவர் வீட்டுக்கு கத்தியும், அரிவாளும் எடுத்துக்கொண்டு வந்து மிரட்டினார்கள். தன் மேல் கத்தி வீசியவரின் கையைப் பிடித்து மடக்கினார் ரகுமான்கான். உடனே கலைஞர் அவர் வீட்டுக்கே வந்துவிட்டார். இதுதான் தி.மு.க.! இதுதான் தலைவர் கலைஞர்!
சட்டப்பேரவையில் ரகுமான்கான் எப்படியெல்லாம் செயல்பட்டார் என்று இன்றைக்கு இருக்கக்கூடியவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது நாம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல்வர். அப்போது சட்டப்பேரவைக்குள்ளே நின்று கட்சியை காப்பாற்றிய எம்.எல்.ஏ-க்களில் முக்கியமான மூன்று பேர் சொல்ல வேண்டும் என்றால், துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான். வரலாறு இவர்கள் மூன்று பேரையும் இடி - மின்னல் – மழை என்று பதிவு செய்திருக்கிறது! அவர்கள் மூன்று பேரும் கேள்வி எழுப்பினால், சட்டப்பேரவை அதிரும்!
சட்டப்பேரவையில் அவர்களால் பேச முடியாததை மக்கள் மன்றத்தில் பேசச் சொல்லி அனுப்பி வைத்தபோது, தமிழ்நாடு முழுக்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், சில ஊர்களில் இவர்கள் கூட்டங்களில் பேச சென்றபோது, அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது மக்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இவர்கள் பேசுவதை கேட்டார்கள்!
நினைத்து பார்க்கிறேன்... மாநாடுகளில் பேசிய ரகுமான்கான் எழுந்தாலே, கூட்டம் ஆர்ப்பரிக்கும்; கைத்தட்டல் விண்ணை முட்டும்! அவருடைய நடை - உடை - பாவனை வித்தியாசமாக இருக்கும். அந்த சுருள் முடியை பார்த்தீர்கள் என்றால், எடுத்து சுருட்டிவிடுவார். ஐந்து நிமிடத்தில் தலைமுடியை சீவி விடுவார். ஆனால், சுருள் முடியை சுருட்டுவதற்கு 10 நிமிடம் ஆகும். பலமுறை நான் பார்த்திருக்கிறேன். அதைப் பற்றி கலைஞர் ஒருமுறை சொன்னார், "சட்டப்பேரவையில் உன் உடலாட - தலையாட - தலையிலுள்ள சுருள் முடியாட அக்காட்சி கண்டு ஆளும் அரசே ஆடியது" என்று பாராட்டினார். அந்தளவுக்கு அவருடைய பேச்சு போலவே, அவருடைய ஹேர்ஸ்டைலும் ஃபேமஸ்!
அதிமுக ஒரு விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்தது. (எப்போதுமே அதிமுக இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணம்தான்!) இதைபற்றி சட்டப்பேரவையில் பேசிய ரகுமான்கான் என்ன சொன்னார் என்றால், "சின்னமோ இரட்டை இலை, அதனால் இரட்டைப் போக்கு" என்று படார் என்று சொன்னார். இதற்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை! பல விவாதங்களுடைய மையப் பொருளாக இருந்தவர் ரகுமான்கான்.
நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இந்த சட்டங்களை திமுக எப்படி கடுமையாக எதிர்ததோ, அதேபோல இந்த கருப்பு சட்டத்தை எதிர்ப்போம். இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள். மக்கள் பிரச்னையை திசை திருப்ப செய்கிறார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக அதை செய்கிறார்கள்.
வரவேற்புரையாற்றிய உதயநிதி சொன்னதுபோல, இடியாக பேசிய அவர், தென்றலாக கவிதைகளையும் எழுதியிருக்கிறார். இதையெல்லாம் அறிந்துகொள்ள இந்த ஆறு புத்தகங்களையும் நீங்கள் எல்லோரும் வாங்கிப் படிக்கவேண்டும்! குறிப்பாக, அவருடைய சட்டப்பேரவை உரைகளை எல்லோரும் படிக்கவேண்டும். எப்படி பேசவேண்டும், எப்படி உரைகளை தயாரிக்க வேண்டும் என்பதற்கு, அவருடைய உரைகள் ஒரு பாடப்புத்தகமாக வந்திருக்கிறது! ரகுமான்கான் போன்ற இடிமுழக்கங்களாக பலர் உருவாகவேண்டும். அதற்காகத்தான், "என் உயிரினும் மேலான" - "பாசறைப் பக்கம்" போன்ற பல முன்னெடுப்புகளை இளைஞர் அணியினர் செய்து கொண்டு இருக்கிறார்கள். மற்ற அணியினரும், இன்னும் பல முன்னெடுப்புகளை எடுத்து, கழக கொள்கை வீரர்களை உருவாக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரைக்கும், "கொள்கையை விதைத்து, உழைப்பை உரமாக்கி, வெற்றியை விளைவிக்க வேண்டும்!" இயக்கத்தில் எத்தனைக் கோடி பேரைச் சேர்த்தாலும், அவர்கள் கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு, தந்தை பெரியார் - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - இனமானப் பேராசிரியர் போன்றவர்களுடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் கொண்டு செல்வது போல, ரகுமான்கான் திராவிட இயக்கத் தீரர்களுடைய சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்!
வெற்றியை நோக்கி நடைபோடும் படைக்குத் தேவையான படைக்கலனாக இந்த நூல்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் சுபேர்கான். அவருடைய மறைவிற்கு பிறகுதான் சுபேர்கானுடன் நான் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், பார்த்தவுடனே நிச்சயமாக இவர் ரகுமான்கானை பின்பற்றுவார் – அவர் வழியில் நடைபோடுவார் – அவருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பொறுப்பை இன்றைக்கு சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் போல திமுக துணை நிற்கும்; துணை நிற்கும் என்று அந்த நிலையை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, திமுக இருப்பது உங்களுக்காக தான் - இந்த சமுதாயத்திற்காக தான்- குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தின் மக்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும் - துணை நிற்கும் என்று கூறினார்.