"நீ அரியணை ஏறும் நாள் வரும்": ஷோபா சந்திரசேகர் வாழ்த்து!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், "நீ அரியணை ஏறும் நாள் வரும்" என விஜய் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சந்திக்க இருக்கும் முதல் தேர்தலிலேயே முத்திரை பதிப்பதற்கான பல்வேறு வியூகங்களை வகுத்து களப்பணிகளை ஆற்றி வருகிறது. அந்த வகையில் தென்மாவட்டங்களை மையப்படுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், சுமாா் 506 ஏக்கா் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேடை, விஜய் தொண்டா்களை நடந்து வந்து சந்திக்கும் வகையில் நீண்ட நடைமேடை, தொண்டா்கள் அமருவதற்கான நாற்காலிகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் 200 ஏக்கா் பரப்பிலும், 306 ஏக்கா் பரப்பில் வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுத் திடலைச் சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட உயா் மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொண்டா்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீா்த் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழாய்கள் மூலமும் குடிநீா் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
மாநாட்டிற்காக காலை முதலே லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் மதுரை பாரப்பத்தி நோக்கி கூட்டம் கூட்டமாக புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாலை 4 மணிக்கு தொடங்க இருந்த மாநாட்டை முன்கூட்டியே தொடங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந் நிலையில், ஷோபா சந்திரசேகர், மதுரை மாநாட்டை முன்னிட்டு தனது மகன் விஜய்க்கு வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், வெள்ளித்திரையில் உன்னை பார்த்து வெற்றியடையச் செய்த தாய்மார்கள், தங்கை, தம்பிகள் உனது அரசியல் வெற்றிக்கு துணையாய் நின்று உயர்த்துவார்கள். வரவிருக்கும் பேரவைத் தேர்தல் உன் இமாலய வெற்றியைக் காட்டும்.
"நீ அரியணை ஏறும் நாள் வரும்"... அது உன் தொண்டர்களின் திருநாள். தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை, உன் வெற்றிக்கு வானமே எல்லை… வாழ்த்துகள் விஜய் என்று ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார்.