Snake: இறந்த பிறகும் விஷத்தைக் கக்கும் இந்தியப் பாம்புகள்; புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?
இந்தியாவில் காணப்படும் சில கொடிய பாம்பு இனங்கள், குறிப்பாக நாகப்பாம்பு (Cobra) மற்றும் கிரைட் (Krait) போன்ற பாம்புகள் இறந்துபோன பின்பும் கூட பல மணி நேரத்திற்கு விஷம் வெளிப்படுத்தக் கூடியவை எனப் புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ராட்டில் ஸ்நேக், ஸ்பிட்டிங் கோப்ரா போன்ற சில பாம்புகளுக்கு மட்டுமே இத்திறன் இருப்பதாக நம்பப்பட்டிருந்தது.
ஆனால் அஸ்ஸாமில் நடைபெற்ற ஆராய்ச்சியில், இந்திய மோனாகிள் கோப்ரா (Naja kaouthia) மற்றும் பிளாக் கிரைட் (Bungarus lividus) இனங்களுக்கும் இத்திறன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்து Frontiers in Tropical Disease என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை அஸ்ஸாமின் நாம்ருப் கல்லூரியைச் சேர்ந்த சுச்மிதா தாக்கூர் தலைமையிலான குழு மேற்கொண்டது. அஸ்ஸாமில் உள்ள கிராமப்புற சுகாதார மையங்களில் பதிவான மூன்று சம்பவங்கள் இதற்கான ஆதாரமாகக் கூறப்படுகிறது.
அந்த மூன்று சம்பவங்களிலும் பாம்புகள் இறந்த பின்பும் விஷத்தை வெளியிட்டுள்ளது. இதனால் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் விளக்கும்போது, ”பாம்பின் விஷக் குழாய் (venom gland) பற்களுடன் இணைந்திருப்பதால், பாம்பு இறந்த பின்பும் அந்தப் பகுதியில் அழுத்தம் கொடுக்கப்பட்டால் விஷம் வெளியேறும்.
இதுவே இறந்த பாம்புகளும் விஷம் செலுத்தக்கூடிய காரணமாக உள்ளது. பாம்பு கொல்லப்பட்ட பிறகும் அதைக் கையால் தொடக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.