அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.50 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?
உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த அலாஸ்கா வந்த புதின், தன்னுடைய விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப ரூ.2.50 கோடியை அமெரிக்க டாலர்களில் செலுத்த வேண்டியிருந்தது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவுக்கு ரஷிய அதிபர் புதின் கடந்த வாரம் வருகை தந்திருந்தார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ விமானங்கள் வானில் வட்டமடித்து மரியாதை அளிக்கப்பட்டது. ஆனால், மிகவும் அசாதாரணமாக நிகழ்வாக, புதின் தன்னுடைய விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப அமெரிக்க டாலரில் கொடுக்க வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கமளித்த மார்க்கோ ரூபியோ, ரஷிய விமானம் அமெரிக்காவுக்குள் வந்து திரும்பும்போது அவர்களுக்கு எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால், அமெரிக்காவின் புதிய தடைகள் காரணமாக, அவர்களால் நமது வங்கி அமைப்பைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியாததால்தான், ரொக்கமாகப் பணம் கொடுக்கும் நிலை ஏற்பட்டது என்கிறார்.