செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்...
China: குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் `ரோபோக்கள்' - மனிதனுக்கு கிடைக்கும் பயன் என்ன?
சீன விஞ்ஞானிகள் மனித குழந்தையைப் பெற்றெடுக்கும் ரோபோவை உருவாக்கி வருகின்றனர்.
சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் உலகின் முதல் "கர்ப்ப ரோபோவை” உருவாக்கி வருவதாக தி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கருத்தரிப்பு முதல் பிரசவம் வரை மனித கர்ப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கரு, ஒரு செயற்கை கருப்பையில் வளரும் என்றும் ஒரு குழாய் மூலம் ஊட்டச்சத்துகளைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முட்டை மற்றும் விந்து எவ்வாறு கருவுறுதலில் சேர்க்கப்படும் என்பது குறித்த விவரங்களை விஞ்ஞானிகள் இன்னும் வெளியிடவில்லை.
குவாங்சோவைச் சேர்ந்த கைவா டெக்னாலஜி நிறுவனம் தான் இந்த ரோபோவை உருவாக்கி வருகிறது. இதற்கு சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் ஜாங் கிஃபெங் தலைமை தாங்குகிறார்.
இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக அமைந்தால், மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் அல்லது உயிரியல் கர்ப்பத்தை தவிர்க்க விரும்பும் தனிநபர்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
டாக்டர் ஜாங் இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே முதிர்ந்த நிலையில் உள்ளதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "இந்த ரோபோவின் முதல் மாதிரி 2026-ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் 100,000 யுவான் (தோராயமாக 14,000 அமெரிக்க டாலர்கள்) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் தாய்- குழந்தையின் பிணைப்பு, முட்டை மற்றும் விந்து ஆதாரங்கள் மற்றும் குழந்தையின் மனவியல் தாக்கம் ஆகியவை தொடர்பான கவலைகளை எழுப்பியுள்ளது.
இதற்கிடையில், இந்த தொழில்நுட்பம் புரட்சிகரமான இனப்பெருக்க அறிவியலாக இருக்கும் எனவும், உலகளவில் சுமார் 15 சதவீத தம்பதிகளைப் பாதிக்கும் மலட்டுத்தன்மை சவால்களுக்கு இது உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.