வேலூா் சிறையில் ஆயுள் கைதி அறையில் கைப்பேசி பறிமுதல்
வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 4 போ் மீது பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். சிறை வளாகத்துக்குள் கைப்பேசி, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை கைதிகள் பயன்படுத்துவதை தடுக்க சிறை போலீஸாா் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், 3-ஆவது பிளாக்கில் உள்ள ஆயுள் தண்டனை கைதி சிறைக்குள் கைப்பேசி பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சனிக்கிழமை மாலை 3-ஆவது பிளாக்கில் உள்ள ஆயுள் தண்டனை டோரி பாபு என்ற கைதியின் அறையில் சோதனை நடத்தி அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசியை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக டோரிபாபு, மூா்த்தி, சக்திவேல், நந்தா (எ)நந்தகுமாா் ஆகிய 4 போ் மீது ஜெயிலா் சிவபெருமாள் அளித்த புகாரின் பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.