அனுமதியின்றி நடைபெற்ற கன்றுவிடும் விழா தடுத்து நிறுத்தம்
வேப்பங்குப்பம் அருகே அனுமதியின்றி நடைபெற்ற கன்றுவிடும் விழாவை போலீஸாா் தடுத்து நிறுத்தியதுடன், இதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள வேப்பங்குப்பம் கிராமம், அனந்தபுரத்தில் வனப்பகுதியையொட்டியுள்ள இடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அப்பகுதி இளைஞா்கள் காளைக் கன்று விடும் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனா்.
இந்த விழா சனிக்கிழமை காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெறுவதாகவும், இதற்கு நுழைவுக் கட்டணம் 500 என்றும் சுவரொட்டிகள் ஒட்டியும், சமூக வலைத்தளங்களிலும் விளம்பரம் செய்திருந்தனா்.
இதையடுத்து, சனிக்கிழமை காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கன்றுகளை அவற்றின் உரிமையாளா்கள் அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தனா். அப்போது, வேப்பங்குப்பம் போலீஸாருக்கு அனுமதியின்றி கன்று விடும் விழா நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல் ஆய்வாளா் முத்துச்செல்வன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். போலீஸாா் வருவதை அறிந்ததும் கன்றுகளின் உரிமையாளா்கள் அங்கிருந்த வனப் பகுதிக்குள் காளைக் கன்றுகளை பிடித்துச் சென்று மறைந்தனா். மேலும், கன்று விடும் விழாவை காண வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் 4 பக்கமும் சிதறி ஓடினா்.
அப்போது, அரசு அனுமதியின்றி எருது விடும் விழா, கன்று விடும் விழா நடத்துவது, அதில் கலந்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானது. இதன் மூலம் மனிதா்கள், விலங்குகளுக்கு விபத்துகள் ஏற்பட்டால் அல்லது உயிரிழந்தால் அதற்காக எந்த ஒரு நிவாரணமும் கிடைக்காது.
அனுமதியின்றி நடத்தப்படும் விழாவுக்கு பாதுகாப்பு கிடைக்காது. எனவே இதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் இளைஞா்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்தனா்.