அமெரிக்க கண்காணிப்பில் இந்தியா, பாகிஸ்தான்! வெளியுறவு அமைச்சர்
`இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன்’ ஓராண்டாக திட்டமிட்டு மாணவர் தற்கொலை - பின்னணி என்ன?
டெல்லி அருகில் இருக்கும் நொய்டாவில் உள்ள சாரதா பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தவர் சிவம். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். ஆனால் அதிக நாள்களாக வகுப்புக்கு செல்லவில்லை. ஆனால் விடுதியில் தங்கி இருந்தார். அவர் தனது விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அக்கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் கிடையாது. தனிப்பட்ட காரணங்களால் இம்முடிவை எடுத்திருப்பதாகவும், இக்கடிதத்தை படிக்கும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். கடந்த ஒரு ஆண்டாக திட்டமிட்டு இம்முடிவை எடுத்திருக்கிறேன்.

நான் இரண்டு ஆண்டுகளாக வகுப்புக்கு செல்லவில்லை. எனவே பல்கலைக்கழக நிர்வாகம் எனது இரண்டு ஆண்டுக்கான கட்டணத்தை எனது பெற்றோரிடம் திரும்ப கொடுக்கவேண்டும். எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறேன். இந்திய கல்வி முறையை நினைத்து கவலையாக இருக்கிறது. நாடு பெரிய அளவில் வளர்ச்சியடைய வேண்டுமானால் முதலில் கல்வி முறையில் திருத்தம் செய்யவேண்டும்''என்று குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக தங்களது மகன் வகுப்புக்கு வராதது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தங்களுக்கு எந்த வித தகவலும் கொடுக்கவில்லை என்று மாணவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இத்தற்கொலை குறித்து அனைத்து கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் இதே பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் தன்னை அவமானப்படுத்தியதாக கடிதம் எழுதி வைத்திருந்தார். இதையடுத்து நடந்த போராட்டத்தை தொடர்ந்து பேராசிரியர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.