மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் திருடிய பெண் கைது
குஜராத் மாநிலம் நவ்சாரியைச் சேர்ந்தவர் ஜோதி பனுசாலி (27). இவரது சகோதரி நிஷா மும்பையில் உள்ள வசாய் என்ற இடத்தில் வசித்து வருகிறார். பனுசாலியின் சகோதரி நிஷா தனது வீட்டில் இருந்து வெளியில் சென்று இருந்தார்.
வீட்டில் அவரது 66 வயது மாமியார் மட்டும் தனியாக வசித்து வந்தார். வீட்டிற்கு காலை நேரத்தில் ஆண் ஒருவர் வந்து கதவைத் தட்டினார். அந்த நபர் வீடு வாடகைக்குப் பார்க்க வந்திருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக இரண்டு பேரும் சில நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர். அந்நேரம் வீட்டிலிருந்த கழிவறையைப் பயன்படுத்திக் கொள்ளட்டுமா என்று மூதாட்டியிடம் வாடகை வீடு தேடி வந்த நபர் கேட்டார்.

மூதாட்டியும் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி கொடுத்தார். பாத்ரூம் சென்ற அந்த நபர் பாத்ரூம்பில் தண்ணீர் கசிவு இருப்பதாக மூதாட்டியிடம் தெரிவித்தார். உடனே மூதாட்டி பாத்ரூம்பிற்குள் வந்தார். பாத்ரூமிற்குள் வந்த மூதாட்டியை உள்ளே வைத்து அடைத்து வெளியில் பூட்டு போட்டுவிட்டு வீட்டிலிருந்த நகை மற்றும் பணத்தை அங்கு வந்த நபர் திருடிச்சென்றார்.
மூதாட்டியின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் அப்பெண்ணை விடுவித்தனர். வீட்டைச் சோதித்துப் பார்த்தபோது அங்கு இருந்த நகை மற்றும் வெள்ளி திருடுபோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. திருட்டு நடந்த மூதாட்டியின் வீட்டில் தாடி வைத்திருந்த நபர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தார்.
அந்த நபரைக் கண்காணிப்பு கேமரா மூலம் நடமாட்டத்தை ஆய்வு செய்தபோது ரயில் நிலையத்திற்கு அருகில் சென்ற அந்த நபர் தனது முகத்திலிருந்த தாடியை எடுத்து விட்டு பெண்ணாக மாறினார். பின்னர் அவர் ரயில் ஒன்றில் ஏறிச்சென்றார்.
இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்புப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் குஜராத் மாநிலம் நவ்சாரி என்ற இடத்தில் அப்பெண் ரயிலில் இருந்து இறங்கினார். அப்பெண்ணின் புகைப்படத்தை நகைகள் திருட்டுப் போன வீட்டில் இருந்தவர்களிடம் போலீஸார் காட்டியபோது போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த வீட்டின் மருமகள் நிஷா அப்பெண்ணைத் தனது சகோதரி ஜோதி பனுசாலி என்று தெரிவித்தார். உடனே அப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜோதியிடம் போலீஸார் விசாரித்தபோது, ''ஜோதி பங்கு வர்த்தகத்தில் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார். அதில் முதலீடு செய்வதற்குத் தேவையான பணத்தைச் சேர்க்க நகைகளை விற்க எண்ணியபோது, தனது தாயார் அந்நகைகளை அடமானம் வைத்து இருந்தது தெரிய வந்தது. ஜோதியை பெண் பார்த்து நிச்சயதார்த்தம் செய்ய மணமகன் வீட்டினர் வரத் திட்டமிட்டு இருந்தனர்.
அந்நேரம் வீட்டில் இருந்த தங்க நகைகளை ஜோதி அணிய வேண்டிய நிலையில் இருந்தார். ஆனால் ஏற்கனவே இருந்த நகைகள் கடையில் அடமானம் வைத்து இருந்தார். எனவே பணம் இருந்தால் மட்டுமே அவரால் தங்க நகைகளைத் திரும்பப் பெற முடியும்.
ஜோதியின் சகோதரி நிஷா தனது சகோதரியின் திருமண நிச்சயதார்த்தத்திற்கு நவ்சாரி சென்று இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் நிஷாவின் மாமியார் வீட்டில் தனியாக இருப்பார் என்று கருதி ஜோதி ஆண் வேடமிட்டு தங்க நகைகளைத் திருடி இருக்கிறார்.
இரண்டு மாதத்திற்கு முன்பு ஜோதி தனது சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்படி வந்தபோது தனது சகோதரியிடம் இருக்கும் தங்க ஆபரணங்கள் மற்றும் அவை எங்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருந்தார். திருட்டு நடந்து 12 மணி நேரத்தில் ஜோதி கைது செய்யப்பட்டுள்ளார்" என்று துணை போலீஸ் கமிஷனர் சந்தீப் தெரிவித்தார்.
ஜோதியிடமிருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.