செய்திகள் :

`StartUp' சாகசம் 37 : `உணவு கலப்படம் என்ற பெரும் சவால்.!’ - அமெரிக்க ரிட்டர்னின் `AMMA GENOMICS’ கதை

post image

இந்தியாவில் உணவு என்பது வெறும் பசியாற்றும் பொருள் மட்டுமல்ல, அது நம் பாரம்பரியத்தின் மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளம். "உணவே மருந்து" என்ற நம் முன்னோர்களின் தத்துவம் இன்றும் பொருத்தமானதாக உள்ளது. ஆனால், இன்று வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறையால், உணவுப் பாதுகாப்பு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

  • கலப்படம் மற்றும் நச்சுத்தன்மை: அதிகரித்து வரும் தேவை காரணமாக, லாப நோக்கத்திற்காக உணவில் கலப்படம் செய்வது அதிகரித்துள்ளது. பூச்சிக்கொல்லிகள், இரசாயனங்கள் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் போன்றவை உணவில் கலக்கப்படுகின்றன. இது உடனடி வயிற்று உபாதைகள் மட்டுமின்றி, நீண்டகாலத்தில் புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் தன்னுடல் தாக்குநோய்கள் (autoimmune diseases) போன்ற தீவிர நோய்களுக்கும் வழிவகுக்கின்றன.

  • ஊட்டச்சத்து குறைபாடு: இன்றைய பதப்படுத்தப்பட்ட உணவுகளில் (processed foods) ஊட்டச்சத்து மதிப்பு குறைவாக உள்ளது. இது மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது.

  • விழிப்புணர்வு இல்லாமை: கலப்பட உணவுகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதன் காரணமாக, பலரும் தரமற்ற உணவுகளைத் தெரியாமலேயே வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

உணவு பாதுகாப்பு ஆணையம்

இந்திய அரசு இந்தச் சவால்களை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உணவுப் பாதுகாப்பு விதிகளை உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்துகிறது.

  • கண்காணிப்பு மற்றும் சோதனை: FSSAI, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பரிசோதனை ஆய்வகங்கள் (Food Testing Labs) மூலம் உணவு மாதிரிகளைப் பரிசோதித்து, அதன் தரத்தை உறுதி செய்கிறது. இந்த ஆய்வகங்கள் நுண்ணுயிரியல், ரசாயனவியல் மற்றும் ஊட்டச்சத்துப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றன.

  • தொழில்நுட்பப் பயன்பாடு: நடமாடும் ஆய்வகங்கள் (Mobile Labs), விரைவான பரிசோதனை கருவிகள் (Rapid Testing Kits), மற்றும் நவீன டிஎன்ஏ பரிசோதனை போன்ற தொழில்நுட்பங்கள் கலப்படத்தை விரைவாகக் கண்டறிய உதவுகின்றன.

  • மக்களுக்கு விழிப்புணர்வு: "ஜாகோ கிரஹக் ஜாகோ" போன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

AMMA GENOMICS

அமெரிக்காவில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவத்துடன், டாக்டர் பிரதீப் சள்ளில் மற்றும் அவரது மனைவி பிரியா சள்ளில் ஆகியோர் தமிழ்நாட்டில் 'அம்மா ஜெனோமிக்ஸ்' ( AMMA GENOMICS ) நிறுவனத்தைத் தொடங்கினர். உணவுப் பரிசோதனை, ஆராய்ச்சி, மற்றும் கல்வி மூலம், இந்நிறுவனம் தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை இலக்காக கொண்டு செயல்படுத்தி  வருகிறது.

சரியான பரிசோதனைகள் மற்றும் மக்களின் விழிப்புணர்வு மூலம், உணவு கலப்படம் என்ற பெரும் சவாலை வெல்ல முடியும் என்பதை 'அம்மா ஜெனோமிக்ஸ்' போன்ற நிறுவனங்கள் நிரூபித்து வருகின்றன. இனி அம்மா ஜெனோமிக்ஸ் வளரும் சாகசக் கதையைக் டாக்டர் பிரதீப் சள்ளில் மற்றும் அவரது மனைவி பிரியா சள்ளில்  ஆகியோரிடம் கேட்போம்...

டாக்டர் பிரதீப் சள்ளில்
டாக்டர் பிரதீப் சள்ளில்
``பல துறைகள் தொழில்நுட்பத்திலும் பிற வழிகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் மட்டும் உணவுப் பரிசோதனைத் துறையைத் தேர்ந்தெடுத்தது ஏன்? எது உங்களை இந்தத் துறை நோக்கி இழுத்தது?”

``நான் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி. உயிரியல் வேதியியல் (Biochemistry) முடித்து, முனைவர் பட்டத்தை புற்றுநோய் உயிரியலில் (Cancer Biology) பெற்றேன். அப்போது, 1997-இல், 'புற்றுநோயும் உணவும்' என்ற ஒரு புத்தகத்தை நான் வெளியிட்டேன். ஏனென்றால், உலகெங்கிலும் 1997-இல் வெளிவந்த பல ஆய்வுகள், தவறான உணவுப் பழக்கங்கள் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டின. உணவில் நச்சுத்தன்மை (toxic) இருந்தால், பலவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.


ஒருமுறை ஹைதராபாத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் (conference) கலந்துகொண்டேன். அங்கு ஒரு கிராமத்தில் குழந்தைகள் பிறப்பதே இல்லை. மக்கள் இதை அம்மனின் கோபம் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு ஆய்வாளர் (researcher) நேரடியாகச்அந்த கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்ததில் , அந்த கிராமத்தில் திராட்சை விவசாயம் அதிகம். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் (pesticides) பயன்படுத்துவதைப் பற்றி அறியாமல், கைகளால் கலக்கி, முகக்கவசம் அணியாமல் வேலை செய்திருக்கிறார்கள். இது 1992-93-ஆம் ஆண்டு வாக்கில் நடந்தது. மதியம், பெண்கள் தங்கள் கணவர்களுக்கு உணவு கொண்டு வருவார்கள். பூச்சிக்கொல்லி கலக்கிய கையைக் கழுவாமல் சாப்பிட்டது மட்டுமில்லாமல், மீதியை அவர்களும் சாப்பிட்டிருக்கிறார்கள். இதனால் கணவரின் விந்தணுக்களும், மனைவியின் கருமுட்டைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால்தான் குழந்தை பாக்கியம் இல்லாமல் போயிருக்கிறது என்பதை கண்டறிந்தர், இதுபோன்ற பல ஆராய்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் எனக்கு உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தின.

பிறகு, 1997-ஆம் ஆண்டு, நியூயார்க்கில் உள்ள ராஸ்வெல் பார்க் புற்றுநோய் நிறுவனத்தில் (Roswell Park Cancer Institute) பணியாற்றச் சென்றேன். அங்கும், உணவின் மூலமாக குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்கள் குறித்து நாங்கள் ஆராய்ச்சி செய்தோம். அதன் பிறகு, 2000-ஆம் ஆண்டில், மற்றொரு உணவுப் பரிசோதனை நிறுவனத்தில் இணைந்து 19 ஆண்டுகள் பணியாற்றினேன். அங்கேயும், உணவில் உள்ள கலப்படம் (adulteration) அமெரிக்காவில் கூட எவ்வளவு பெரிய சுகாதாரப் பிரச்சனைகளை (health problems) ஏற்படுத்துகிறது என்பதை நான் கண்டேன்.

பின்னர் கோவிட் காலத்தில், என் பெற்றோரைப் பார்க்க சென்னை வந்தபோது, ஊரடங்கால் (lockdown) திரும்பிச் செல்ல முடியவில்லை. அப்போதுதான் என் நண்பர்,  ' இவ்வளவு அனுபவத்தைக்கொண்ட நீ இங்கேயே ஏன் ஒரு பரிசோதனை ஆய்வகத்தை (diagnostic lab) ஆரம்பிக்கக் கூடாது?' என்று கேட்டார். அப்போது போட்ட விதை பின் ஒரு இடத்தில் வேலை செய்த பணியாளர்கள் டீ அருந்துவதைப் பார்த்தபோது, அந்த டீயை பரிசோதிக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே அந்த டீயில் இருந்த பாலை பரிசோதித்தபோது, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத பல இரசாயனங்கள் (chemicals) கலந்திருப்பது தெரியவந்தது. அப்போதுதான், மருத்துவ ஆய்வுகள் மட்டும் போதாது, உணவையும் பரிசோதிக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

மேலும், இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு (awareness) அதிகரித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கரை நோய்க்காக மருத்துவரிடம் சென்றால், அவர் மாத்திரை மட்டுமே கொடுப்பார். ஆனால், இப்போது மருத்துவர்கள் மருந்துகள் மட்டும் போதாது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் (fiber-rich foods) சாப்பிட வேண்டும் என்றும், சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை (refined carbohydrates) தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இது மருந்துகளால் மட்டும் நோய்களைக் குணப்படுத்த முடியாது என்பதையும், உணவுக்கு ஒரு பெரிய பங்கு இருப்பதையும் உணர்த்துகிறது. நமது சித்தர்கள் சொன்னது போல, 'உணவே மருந்து' என்பதில் எனக்கும் நம்பிக்கை இருந்தது. அதனால் அம்மா ஜெனோமிக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தோம்.”

``நீங்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றும்போது, குறிப்பாக பால் பொருட்கள் மற்றும் உணவகங்கள் போன்ற துறைகளில், எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறீர்கள்? இந்த வேறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் தர உறுதி அணுகுமுறைகளை (quality assurance approaches) எவ்வாறு தனிப்பயனாக்குகிறீர்கள்?”

``பால் பொருட்கள் துறையில் பல சவால்கள் உள்ளன. இப்போதெல்லாம், நிறுவனங்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய எங்களிடம் பரிசோதனைக்காக மாதிரிகளைக் கொண்டு வருகிறார்கள். 'அம்மா ஜெனோமிக்ஸ்' நிறுவனம் உண்மையான முடிவுகளைத் தரும் என்ற நம்பிக்கையில் மக்கள் எங்களிடம், 'இந்த பாலில் யூரியா, ஃபார்மலின் போன்ற பாதுகாப்புப் பொருட்கள் (preservatives) கலந்திருக்கிறதா?' என்று கேட்கிறார்கள். பாக்கெட் பாலாக இருந்தாலும் சரி, வீட்டில் கறந்த பாலாக இருந்தாலும் சரி, சில சமயங்களில் அதிக அளவில் கலப்படம் இருப்பதைக் காண்கிறோம். பன்னீர், நெய் போன்ற பிற பால் பொருட்களிலும் கலப்படம் காணப்படுகிறது. 'நாட்டுப் பசு மாட்டுப் பால்' என்று சொல்லி, கலப்படம் செய்யப்பட்ட பால் விற்கப்படுகிறது. 


எங்களது ஆய்வகம் (lab) A1 மற்றும் A2 பால் வகைகளுக்கான பரிசோதனைக்கு ISO சான்றிதழ் பெற்ற ஆய்வகம்.  இந்தியாவில்  A2 பால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் மேலை நாடுகளில் நெஸ்லே போன்ற நிறுவனங்கள் கூட A2 பால் சாக்லேட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. A2 பாலில், A1 BCM பெப்டைடு (peptide) என்ற ஒரு புரதம் (protein) இல்லை. இந்தப் புரதம் பல நோய்களுக்குக் காரணமாக இருப்பதால், மக்கள் அதைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். இவை அனைத்தும் எங்களுக்கு சவால்களாக இருந்தன. ஆனால், எங்கள் தொழில்நுட்பம் (technology) மூலம் அவற்றைக் கண்டறிந்து சரியான முடிவுகளை வழங்குகிறோம்.”

உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கும், அவற்றைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கும் இடையே உணவுத் தரம் குறித்து பல கவலைகள் உள்ளன. இங்கே உங்களது பணி என்ன?

``மக்கள் எங்களிடம், 'வெறுமனே பரிசோதனை மட்டும் செய்கிறீர்கள், ஆனால் எந்த உணவு ஆரோக்கியமானது? எது நல்லது? எது கெடுதல் இல்லாதது?' என்று கேட்க ஆரம்பித்ததால்தான், எனது மனைவி பிரியா சள்ளில் 'மாவோ மிக்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.


இன்று, நாங்கள் சில நம்பகமான தயாரிப்பாளர்களுடன் இணைந்து சில உணவுப் பொருட்களை உருவாக்குகிறோம். கலப்படம் இல்லாமல், ஒவ்வொரு பொருளையும் பரிசோதித்து மட்டுமே 'மாவோ மிக்ஸ்' மூலம் விற்கிறோம். இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கூட, அமெரிக்காவில் கூட இந்த தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள்.”

``ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு வகையான பரிசோதனை உண்டு. மஞ்சள், அரிசி, மசாலா, பால் பொருட்கள், நெய் போன்றவற்றுக்கு எவ்வாறு பரிசோதனை செய்கிறீர்கள் என்பதை உதாரணத்துடன் விளக்க முடியுமா?”

``அரசாங்கத்தின் FSSAI (Food Safety and Standards Authority of India) விதிகளை 100% கடைபிடிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். அவர்கள் கேட்கும் ஊட்டச்சத்து உண்மைகள் (nutritional facts) அனைத்தையும் நாங்கள் வழங்குகிறோம். ஆனால், அது மட்டும் போதாது. மக்களுக்கு தனிப்பட்ட முறையில், 'இந்த உணவில் எவ்வளவு மூலிகைத்தன்மை இருக்கிறது?', 'எவ்வளவு பாலிஃபீனால்கள் (polyphenols) மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் (antioxidants) உள்ளன?' என்று அறிய வேண்டும். ஏனெனில், இன்றைய நோய்களுக்கு முக்கியக் காரணம் அழற்சி (inflammation).


சித்த மருத்துவத்தில் அக்னி, உஷ்ணம் என்று சொல்வார்கள். எந்த உணவுகள் அழற்சியைக் குறைக்கும், அவற்றில் எவ்வளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் உள்ளன என்பதை பரிசோதிப்பது அவசியம். மஞ்சள் ஒரு சிறந்த உதாரணம். மஞ்சளில் குர்குமின் (curcumin) என்ற ஒரு வகை பாலிஃபினால் மட்டுமே மக்களுக்குத் தெரியும். ஆனால், அதைத் தவிர ரூட்டின் (rutin), குர்செட்டின் (quercetin), ஆந்தோசயனிடின்ஸ் (anthocyanidins), ஹெஸ்பெரிடின் (hesperidin), ரெஸ்வெரட்ரால் (resveratrol) போன்ற பல மூலிகைத்தன்மைகள் உள்ளன. ஒவ்வொரு மூலிகைத் தன்மைக்கும் உடலில் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு உள்ளது. உதாரணமாக, குட்டி வெங்காயத்தில் உள்ள குர்செட்டின் கணையத்திற்கு (pancreas) மிகவும் அவசியம். நிலக்கடலை மற்றும் திராட்சையில் உள்ள ரெஸ்வெரட்ரால் (Resveratrol)புற்றுநோயைத் தடுக்கும். ரூட்டின் இரத்தக் குழாய்களை (blood capillaries) வலுப்படுத்துவதோடு, வெரிகோஸ் வெயின்களைத் (varicose veins) தடுக்கும்.

எங்களது ஆய்வகத்தில், இந்த மூலக்கூறுகளை உணவில் மட்டுமல்லாமல், அதை உட்கொள்ளும் மக்களின் சிறுநீர் (urine) மற்றும் இரத்தம் (blood) ஆகியவற்றிலும் பரிசோதிக்கிறோம். 'உங்கள் உடலில் இந்தச் சத்துக்கள் போதுமான அளவு உள்ளதா?' என்று கேட்டறிந்து, தேவையான உணவுகளைச் சாப்பிடும்போது உடல் வலுவாகும். உணவுப் பரிசோதனை செய்து, சரியான உணவுகளை எடுத்துக் கொண்டதால் விரைவில் குணமடைகிறார்கள். வெறும் வைட்டமின்களை (vitamins) மட்டும் பார்க்காமல், பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்களையும் பார்ப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது.”

``செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் தானியங்கு முறைகள் (automation) போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உணவுப் பரிசோதனைத் துறையை எவ்வாறு மாற்றுகின்றன? இந்தப் போட்டியில் முன்னணியில் இருக்க உங்கள் நிறுவனம் என்ன புதுமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது?”

``நாங்கள் உணவுகளில் மரபணுப் பரிசோதனை (genetic testing), மூலக்கூறுப் பரிசோதனை (molecular testing), ஆர்என்ஏ வெளிப்பாடுப் பரிசோதனை (RNA expression) போன்றவற்றைச் செய்கிறோம். நான் 25 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்களில் பணியாற்றியதால், இது எனக்கு நன்றாகவே தெரியும்.

இப்போது, க்ளூட்டன் (gluten) பலருக்கு ஒவ்வாமையை (allergy) ஏற்படுத்துகிறது. ஆனால், க்ளூட்டன் உள்ள கோதுமையைச் சாப்பிட விரும்புபவர்களும் இருக்கிறார்கள். நாங்கள் க்ளூட்டன் குறைவாக உள்ள கோதுமை வகைகளைத் தேடிக் கண்டறிகிறோம். அதற்காக விவசாயிகளுடன் (farmers) இணைந்து பணியாற்றுகிறோம். அவர்களுக்கு நாங்கள் மண்ணின் நுண்ணுயிர்ப் பரிசோதனையை (soil microbiome testing) செய்கிறோம். மக்களின் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். ஆனால், மண்ணின் வளத்தையும் நாங்கள் பரிசோதிக்கிறோம்.

நாங்கள் என்ஜிஎஸ் (NGS - Next-generation sequencing) மற்றும் டிஎன்ஏ வரிசைமுறை (DNA sequencing) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மண்ணையும், மனித மலத்தையும் பரிசோதித்து நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களைக் கண்டறிகிறோம். இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆரோக்கியமாக வாழவும், நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. பிசிஆர் தொழில்நுட்பம் (PCR technology) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது எங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. விரைவில் செயற்கை நுண்ணறிவைப்பயன்படுத்தி செயல்பட திட்டமிட்டுள்ளோம்.”

பிரியா சள்ளில்
``வாடிக்கையாளர்களுக்கு சவாலான உணவுப் பாதுகாப்புப் பிரச்னைகளில் உங்கள் நிறுவனம் எவ்வாறு உதவியது என்பதைப் பற்றி ஒரு சில உதாரணங்களைக் கூற முடியுமா?”

``நாங்கள் பலரின் உணவுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டிருக்கிறோம். ஒருவர், ஒரு கடையில் வாங்கிய கெட்டுப்போன வறுத்த அரிசியில் (fried rice) கெட்ட பாக்டீரியாக்கள் (bacteria) இருக்கிறதா என்று கேட்டார். நாங்கள் பரிசோதித்து, 'ஆமாம், இருக்கிறது, அதைச் சாப்பிட வேண்டாம்' என்று உறுதிப்படுத்தினோம். அவர், 'ரொம்ப நல்லதாகப் போயிற்று, இல்லையென்றால் எனக்கு உணவு விஷமாகி (food poisoning) இருக்கும்' என்று கூறினார்.

மற்றொருவர், தான் வாங்கிய மட்டன், ஆட்டுக் கறியா அல்லது வேறு விலங்குகளின் கறியா என்று சந்தேகம் கொண்டார். நாங்கள் பரிசோதித்தபோது, சில சமயங்களில் அது செம்மறி ஆட்டுக் கறியாக இருந்திருக்கிறது. 

இதேபோன்று, பாலில் உள்ள கலப்படம் குறித்தும் பல கேள்விகள் வந்திருக்கின்றன. A2 பால் என்று அதிக விலை கொடுத்து வாங்குவது உண்மையாகவே A2 தானா, அதில் எருமைப் பால் அல்லது கழுதைப் பால் கலந்திருக்கிறதா என்று கூட மக்கள் கேட்டிருக்கிறார்கள். இதுபோன்ற பல வேடிக்கையான பரிசோதனைகளை நடத்தி பலருக்கும் நன்மை செய்திருக்கிறோம்.

டெல்லியில் இருந்து ஒரு பெண், தன் குழந்தைக்குத் தாய்ப்பால் (breast milk) போதாததால், பாக்கெட் தாய்ப்பாலை வாங்கிப் பயன்படுத்தியுள்ளார். அது உண்மையாகவே தாய்ப்பாலா அல்லது வேறு ஏதேனும் கலந்திருக்கிறதா என்று பரிசோதிக்கக் கொடுத்துள்ளார். இந்த சுவாரஸ்யமான பரிசோதனைகள் அனைத்தையும் எங்களால் செய்ய முடிந்தது, ஏனெனில் எங்களிடம் டிஎன்ஏ தொழில்நுட்பம் (DNA technology) மற்றும் நிறமாலை அளவியல் முறைகள் (spectroscopy methods) உள்ளன.”

``நுகர்வோரிடையே நிலையான தன்மை (sustainability) முக்கியத்துவம் பெறும் நிலையில், உணவு வணிகங்கள் தங்கள் தயாரிப்புகளில் சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை உரிமைகோரல்களைச் சரிபார்க்கவும், உறுதிப்படுத்தவும் நீங்கள் எவ்வாறு உதவுகிறீர்கள்?”

``இன்று கலப்படம் மிக அதிகமாக உள்ளது. நான் சிறுவயதில் இருந்தபோது, பாலில் தண்ணீர் கலப்படம் பற்றி மட்டுமே பேசுவார்கள். இப்போது நிலைமை வேறு. ஜிம்மிற்கு (gym) செல்பவர்கள் வே புரோட்டீனை (whey protein) எடுத்துக்கொள்கிறார்கள். சரியான மருத்துவ வழிகாட்டுதல்கள் இல்லாமல் சாப்பிடுவதால் ஏற்படும் அதன் கெடுதல்கள் தெரியாது. வயிறு பிரச்னைகள், கட்டிகள், புற்றுநோய் என்று பல சிக்கல்கள் ஏற்படலாம்,. 'நான் ஒரு சைவ உணவுக்காரர் (vegetarian), கடவுள் பக்தி உள்ளவன், எனக்கு ஏன் இந்த வயதில் புற்றுநோய் வந்தது?' என்று கேட்பவர்கள் பலர். 

மக்கள் ஊட்டச்சத்து குறித்தும் அதன் மீது எழுதியிருக்கும் லேபிளில் (label) எழுதியிருப்பது உண்மையா என்று கேட்கிறார்கள். இவை அனைத்தையும் நாங்கள் பரிசோதித்து முடிவுகளை வழங்குகிறோம்.”

``மனிதர்களின் ஆயுளை நீடிப்பது (longevity), உணவுக்குமான பிணைப்பு பற்றி விரிவாக சொல்லுங்கள்?”

``எதிர்கால நோய்களைத் தடுப்பது மட்டுமல்ல, மனிதர்களின் ஆயுளை நீடிப்பது (longevity) பற்றியது. நான் பெங்களூரில் நடந்த ஒரு உலகளாவிய கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, உலகெங்கிலும் இருந்து வந்த அறிஞர்கள், நமது ஆயுளை நீடிப்பதில் உணவுக்கு ஒரு பெரிய பங்கு உண்டு என்று வலியுறுத்தினர்.


இன்று சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது, அதை நிர்வகிக்க (manage) மட்டுமே முடியும் என்கிறார்கள். புற்றுநோய்க்கும் மேலாண்மை மட்டுமே செய்யப்படுகிறது. கீமோதெரபி (chemotherapy) மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை (radiation) புற்றுநோய் செல்களை (cancer cells) மட்டுமே அழிக்கும். ஆனால், புற்றுநோய் மூலச் செல்களை (cancer stem cells) அழிக்க நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு (immunity) மட்டுமே முடியும். அதற்கு உணவும், குடல் நுண்ணுயிர்களும் (gut microbiome) உதவுகின்றன.

இன்றைய சுற்றுச்சூழல் நச்சுத்தன்மை (environmental toxins), மாசுபட்ட உணவு, நீர், காற்று ஆகியவற்றால் நமது உடல் பலவீனமடைகிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள, உணவில் உள்ள அதிக சக்திவாய்ந்த பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்களை நாங்கள் பரிசோதித்து வழங்குகிறோம்.

நான் 1997-இல் ராஸ்வெல் பார்க் புற்றுநோய் நிறுவனத்தில் குழந்தைகள் புற்றுநோய் பிரிவில் (pediatric oncology) பணிபுரிந்தபோது, 10-12 வயது குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், இப்போது சென்னையில் ஒரு வயது, ஆறு மாதக் குழந்தைகள் கூட புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மிகவும் வருத்தமான ஒன்று. இதைத் தடுக்க, நாங்கள் செய்யும் பரிசோதனைகள் மிகவும் முக்கியமானவை.


அதேபோல், அரசாங்கம் நல்ல சட்டதிட்டங்களை வைத்திருந்தாலும், அவற்றை தவறாகப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். நாங்கள் பொதுமக்களுக்கும், அரசாங்கத்திற்கும் உறுதுணையாக இருந்து வருகிறோம். புற்றுநோய் மட்டுமல்ல, மலட்டுத்தன்மை (infertility), தன்னுடல் தாக்குநோய்கள் (autoimmune diseases) போன்ற பல நோய்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதற்குத் தீர்வு உணவில் தான் உள்ளது.


நாங்கள் உணவுப் பரிசோதனை, உணவு உற்பத்தி (மாவோ மிக்ஸ்), மற்றும் ஊர்ஜு சான்றிதழ் (Oorju certification) போன்ற பல சேவைகளை வழங்குகிறோம். மக்கள் யாரை நம்புவது என்று தெரியாததால், நாங்கள் 'ஊர்ஜிதப்படுத்தி' அதாவது உறுதிப்படுத்திச் சொல்கிறோம். இந்தச் சான்றிதழைப் பல வணிகர்கள் பெற்றுள்ளனர்.

உலகளாவிய உணவு வழங்கல் சங்கிலியில் (global food supply chain), ஒரு உணவு எங்கிருந்து வருகிறது என்பதை அறிய நாங்கள் ஐந்து நிலைகளில் பரிசோதனை செய்கிறோம். இதன் காரணமாக உணவுக்கான செலவு (cost) கூடினாலும், வேறு வழியில்லை. கடந்த வாரம் கூட ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலிருந்து உணவுப் பரிசோதனைக்காக மாதிரிகள் வந்தன.

மனித உடல் மட்டுமல்ல, செல்லப் பிராணிகள் (pet animals) - நாய், பூனை, பறவைகள் - ஆகியவற்றுக்கு என்ன மாதிரியான உணவுகளைக் கொடுக்க வேண்டும் என்று கூட மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள். இவ்வாறு, சமூகத்தின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய நாங்கள் ஒரு பெரிய குழுவாகச் செயல்படுகிறோம்.

'அம்மா ஜெனோமிக்ஸ்' மருத்துவ மற்றும் உணவுப் பரிசோதனை மையமாகவும், 'மாவோ மிக்ஸ்' உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாகவும், 'யூனிஃபை நேச்சுரோ ஜெனோமிக்ஸ்' உணவே மருந்து என்ற கருத்தை மருத்துவ ரீதியாகப் பின்பற்றும் துறையாகவும், 'ஊர்ஜு சான்றிதழ்' நம்பிக்கையை உறுதிப்படுத்தும் துறையாகவும் செயல்படுகின்றன.

அமெரிக்காவில் இதைத் தொடங்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால், இந்திய மக்களும் பயன்பெற வேண்டும் என்று இங்கே தொடங்கினோம். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது தமிழ் மரபு. அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது ஒரு வியாபார நோக்கம் மட்டுமல்ல, அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் இதைச் செய்கிறோம். ” என்கிறார்.

(சாகசம் தொடரும்)


Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

`StartUp' சாகசம் 36 : `பாரம்பரியத்தை 250+ ஐஸ்கிரீமாக மாற்றிய கதை’ - இந்த ஐஸ்கிரீம் ராணியை தெரியுமா?

Chill N Heal Ice creams`StartUp' சாகசம் 36 :இந்தியாவின் ஐஸ்கிரீம் சந்தை கடந்த பத்தாண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில், பாரம்பரிய குளிர்பானங்களிலிருந்து நவீன ஐஸ்கிரீம... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 35 : `ஆவாரம் பூவில் டிப் டீ முதல் நெல்லி முருங்கை சூப்!’ - Aruvi Eco சக்சஸ் சீக்ரட்

Aruvi Eco`StartUp' சாகசம் 35 :வணிக உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. புதிய கண்டுபிடிப்புகள், புதிய உத்திகள் என ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றம் அடைகின்றன. ஆனால், இந்த வேகமான உலகத்தில் நாம் மறந்துபோன... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 34: `Amazon, IBM வேலைகளை விட்டுட்டு Yellow Bag நிறுவனம் - கணவன், மனைவி சொல்லும் கதை

`StartUp' சாகசம் 34 :இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால், அதோடு அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, எனவே இந்தியாவில் சமூகத் தொழில்முனைவோர்களுக்கு (Social Entrepreneurs) ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம்,... மேலும் பார்க்க

டீக்கடை இல்லாம தினமும் 16,000 பேருக்கு டீ, காபி - மதுரை பைலட்டின் Cup Time கதை | `StartUp' சாகசம் 33

Cup Time`StartUp' சாகசம் 33 :கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் பரபரப்பான விவாதப் பொருளாகியிருக்கிறது. ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த தேநீர்க் கடைச் சங்கிலிகள், இன்று என்ன... மேலும் பார்க்க