விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
Adani: இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி; இரண்டாவது அதானி; இவர்களின் சொத்து எவ்வளவு?
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர் யார் என்பதில் முகேஷ் அம்பானிக்கும், அதானிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
முகேஷ் அம்பானி ஆயில், மொபைல், சில்லறை வர்த்தகம் போன்றவற்றில் கொடி கட்டி பறக்கிறார். அதானி இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களை நடத்தி வருவதோடு மின் உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கிறார்.
இந்தியாவில் மொத்தம் 300 கோடீஸ்வரக் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு மொத்தம் ரூ.140 லட்சம் கோடி அளவுக்குச் சொத்து இருக்கிறது. இதில் முதலிடத்தில் முகேஷ் அம்பானி குடும்பம் இருக்கிறது. கோடீஸ்வரர்களின் மொத்த சொத்தில் 12 சதவீதம் முகேஷ் அம்பானியிடம் இருக்கிறது.

கடந்த ஒரு ஆண்டில் அம்பானியின் சொத்து 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அதானிக்கு ரூ.14.01 லட்சம் கோடி அளவுக்குச் சொத்து இருக்கிறது.
குமாரமங்களம் பிர்லாவிற்கு 6.48 லட்சம் கோடி அளவுக்குச் சொத்து இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் குமாரமங்களம் பிர்லாவின் சொத்து 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. இதே போன்று ஜிந்தால் குடும்பத்திற்கு 5.70 லட்சம் கோடி அளவுக்குச் சொத்து இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் ஜிந்தால் குடும்பச் சொத்து 21 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது.
பஜாஜ் குடும்பத்திற்கு 5.64 லட்சம் கோடி அளவுக்குச் சொத்து இருப்பதாக பார்க்லேஸுடன் இணைந்து ஹுருன் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அந்த அமைப்பின் ஆய்வு அறிக்கையில், பஜாஜ் குடும்பத்தின் சொத்து கடந்த ஆண்டை ஒப்பிடும்போது குறைந்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள கோடீஸ்வரப் பணக்காரர்கள் 300 பேரும் சேர்ந்து தினமும் 7100 கோடி அளவுக்குச் சம்பாதிக்கின்றனர். நாட்டில் ரூ.8700 கோடி சொத்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 37லில் இருந்து 161 ஆக அதிகரித்து இருக்கிறது. மும்பையில் மட்டும் 91 கோடீஸ்வரப் பணக்காரர்கள் குடும்பம் இருக்கின்றன.
டெல்லியில் 62 பேரும், கொல்கத்தாவில் 25 பேரும் இருக்கின்றனர். இளம் தலைமுறையினர் அதிக அளவில் தங்களது குடும்பச் சொத்தை நிர்வகிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். புதிய தொழில்களை நடத்துவதில் ஆர்வம் காட்டாமல் இருக்கின்றனர்.
தற்போது அமெரிக்கா இறக்குமதி வரியை 50 சதவீதமாக அதிகரித்து இருப்பதால் இந்தியாவில் உள்ள 120 கோடீஸ்வரக் குடும்பங்கள் நடத்தி வரும் தொழில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
300 கோடீஸ்வரக் குடும்பங்களும் சேர்ந்து கடந்த ஆண்டு ரூ.5100 கோடியை நன்கொடையாக வழங்கி இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.