Gangaikonda Cholapuram Temple History | கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உருவான வரலாறு...
ட்ரம்ப் விதித்த 50% வரி: என்னென்ன ஏற்றுமதிகளைப் பாதிக்கும்? | முழு விவரம்
உலக நாடுகளின் தற்போதைய ஹாட் டாப்பிக், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், அவர் விதித்துள்ள வரியும் தான்'.
அமெரிக்கா மீது பிற நாடுகள் அதிக வரி விதிக்கின்றன... அமெரிக்காவிற்கு பிற நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்குறை இருக்கிறது... போன்ற ஏகப்பட்ட காரணங்களைக் கூறி, உலக நாடுகளின் மீது வரிகளை விதித்துள்ளார் ட்ரம்ப்.
தற்போது அமெரிக்கா, இந்தியா மீது 25 சதவிகித வரி + கூடுதல் 25 சதவிகித வரி என 50 சதவிகித வரி விதித்துள்ளது.
ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால், கூடுதலாக, அபராதமும் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எவ்வளவு என்பது இன்னமும் தெரியவில்லை.

ட்ரம்பின் இந்த வரிகள் இந்தியாவின் ஏற்றுமதிகளை எப்படி பாதிக்கும் என்பதை ப்ளு பாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கே.எஸ்.கமாலுதின் விளக்குகிறார்.
"ஐவுளித்துறை - இது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள துறைகளில் மிக முக்கியமான ஒன்று.
அமெரிக்கா பெரியளவில் இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் இருந்து ஜவுளிகளை இறக்குமதி செய்து வந்தது.
இந்தச் சூழலில், கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, ஒப்பீட்டளவில், இந்தியா மீது குறைந்த சதவிகித வரியையும், வங்காளதேசத்தின் மீது அதிக சதவிகித வரியையும் விதித்தது அமெரிக்கா.
இந்த வரி விதிப்பால், இந்தியாவில் இருந்து அதிகளவில் ஜவுளிகள் இறக்குமதி செய்யப்படும் என்று இந்திய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை அதிகரித்தனர்.
அதுவும் மிக முக்கியமாக, திருப்பூரில் இந்த வரி விதிப்புகளை நம்பி வங்கி கடன்கள் வாங்கி அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டது.

மாறிய வரி விகிதங்கள்
ஆனால், இப்போது இந்தியாவிற்கு 25 சதவிகிதம் என்றும், வங்காளதேசத்திற்கு 20 சதவிகிதம் என்றும் வரி விகிதங்கள் மாறி உள்ளது.
வங்காளதேசத்திற்கு வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க விற்பனையாளர்கள் வங்களாதேசத்தைத் தான் நோக்குவார்கள்.
மேலும், இப்போது ஜவுளி இறக்குமதிகளுக்கு வியட்நாம் மற்றும் இந்தோனேசியா பக்கமும் அமெரிக்கா திரும்பி உள்ளது.
இது இந்திய ஜவுளித்துறை தொழில்முனைவோர்களுக்கு இது பெரும் இடியாக இறங்கியுள்ளது.
அதுவும், இதற்காக கடன் வாங்கியவர்களின் நிலையை சொல்லவே வேண்டாம்.
இந்த நிலை ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்பவர்களுக்கும் பொருந்தும்.

மிதமான ரிஸ்க்... 'நோ' ரிஸ்க்!
அமெரிக்காவிற்கு மருத்துவப் பொருள்களை ஏற்றுமதி செய்பவர்களுக்கு இது மிதமான ரிஸ்கை தரும்.
காரணம், உலகம் முழுவதும் இந்திய மருத்துவப் பொருள்களுக்கு தனி மவுசு உண்டு. அதனால், எப்படியிருந்தாலும், இந்தியாவில் இருந்து இந்தப் பொருள்களை அமெரிக்கா இறக்குமதி செய்து தான் ஆக வேண்டும்.
அதுமட்டுமில்லாமல், அமெரிக்க சந்தையின் இந்த ஏற்றுமதிகளுக்கு பிரச்னை ஏற்பட்டால், இந்தியா பிற உலக நாடுகளைக் கூட சந்தைகளாக மாற்றலாம். அதற்கான வாய்ப்பும் உண்டு.
மிதமான ரிஸ்க் உள்ள இன்னொரு துறை, 'ஸ்டீல்'.
ட்ரம்பின் இந்த வரியால் பாதிப்பில்லாத ஒரே துறை, 'ஐ.டி'.
தொடரும் குழப்பங்கள்
மற்ற துறைகளில், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துவரும் தொழில்முனைவோர்கள், 'அடுத்து என்ன செய்வது?' என்று குழம்பி வருகின்றனர்.
அடுத்து வேறொரு நாட்டிற்கு ஏற்றுமதிகளைச் செய்யலாம் என்று அதற்கு குறைந்தது 6 - 12 மாதங்கள் ஆகும். அதுவரைக்கும் என்ன செய்வது?... அல்லது அதற்குள் இந்தியா - அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுவிடுமா என்று குழுப்பத்தில் இருக்கின்றனர்.
இனி தான் ஏற்றுமதி செய்யப்போகும் தொழில்முனைவோர்களுக்கு மட்டும் இந்தப் பிரச்னை ஏற்பட்டுவிடவில்லை.
ஏற்கனவே ஜூன் இறுதி மற்றும் ஜூலை முதல் வாரத்தில் ஏற்றுமதி செய்தவர்களும் சிக்கலில் மாட்டி உள்ளனர்.

அமெரிக்காவிற்குள் செல்லலாமா... வேண்டாமா?
கப்பல் மூலம் அப்போது கிளம்பிய பொருள்கள் இப்போது தான் அமெரிக்காவை சென்று சேர்த்திருக்கின்றன. இந்தப் பொருள்களை அமெரிக்காவிற்குள் இப்போது எடுத்து செல்ல, 25 சதவிகித வரி கட்ட வேண்டும்.
அப்படியே வரி செலுத்தி எடுத்து சென்றாலும், அவ்வளவு தொகை கொடுத்து மக்கள் பொருள்களை வாங்குவார்களா என்பது பெரும் சந்தேகம்.
ஆக, இந்தப் பொருள்களை அமெரிக்காவிற்குள் கொண்டு செல்லலாமா... வேண்டாமா என்று அமெரிக்க விற்பனையாளர்கள் திணறி போய் உள்ளனர்.

ஏற்கனவே இருக்கும் பாதிப்புகள்
ஏற்கனவே ஊரடங்கு பாதிப்பில் இருந்து இப்போது தான் உலகமும், தொழில்களும் மீண்டு வந்துக்கொண்டிருக்கிறது. அதற்குள் இது பெரிய இடியாக இறங்கியுள்ளது.
இன்னொரு பக்கம், ஏப்ரல் மாதம் கிடைத்த நம்பிக்கையால், தொழில்முனைவோர்கள் கடன் வாங்கி முதலீடு செய்து வைத்திருக்கின்றனர். மேலும், அவர்கள் தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்பதும் உண்டு. இந்தப் பிரச்னை தீரும் வரை, அவர்கள் எப்படி இந்த விஷயத்தைக் கையாளப்போகிறார்கள் என்பது பெரிய கேள்விக்குறி.
சஸ்பென்ஸ்
இந்த அதிர்ச்சியில் இருக்கும்போதே, ட்ரம்ப்பின் இன்னொரு சஸ்பென்ஸ் இன்னும் உடையவில்லை.
அது 'அபராதத் தொகை எவ்வளவு?' என்பது இன்னும் தெரியவில்லை.
என்ன செய்யலாம்?
2010-ம் ஆண்டு, அமெரிக்கா உடன் இந்தியா ஜெனரலைஸ்ட் சிஸ்டம் பிரவரன்ஸ் (GSP) ஒப்பந்தத்தில் இருந்தது. 2019-ம் ஆண்டு வரை, சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்தது.
இதன் மூலம், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா வரி கட்ட தேவையில்லை.
இப்படியான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா உடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.
இந்திய அரசு கட்டாயம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அமெரிக்கா உடனான வர்த்தகம் பெரியளவில் பாதிக்கும்".
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...