வெற்றிக்கு 100 ரன்கள் தேவை என்றாலும் பேட்டிங்குக்கு வந்திருப்பேன்: கிறிஸ் வோக்ஸ்
மியான்மர் அதிபர் காலமானார்!
மியான்மர் நாட்டின் அதிபர் (பொறுப்பு) யூ மைண்ட் ஸ்வீ, உடல் நலக் குறைவால் இன்று (ஆக.7) காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டின் இடைக்கால ராணுவ அரசின், அதிபர் (பொறுப்பு) யூ மைண்ட் ஸ்வீ (வயது 74), பார்கின்சன் உள்ளிட்ட நரம்பியல் நோய்களினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டின் ஜூலை மாதம் முதல், அந்நாட்டு தலைநகர் நய்பிடாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனால், மருத்துவ விடுப்பில் சென்ற அவரது பொறுப்புகள் அனைத்தும் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல். அவூன் ஹ்லைங்-யிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அதிபர் யூ மைண்ட் ஸ்வீ, இன்று (ஆக.7) காலை நய்பிடாவ் மருத்துவமனையில், மரணமடைந்ததாக, மியான்மரின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு மியான்மர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிபர் யூ மைண்ட் ஸ்வீ, 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை யாங்கோன் மாகாணத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.
பின்னர், 2016-ம் ஆண்டு மியான்மர் நாட்டின் துணை அதிபராகப் பதவியேற்ற அவர் 2021-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சியின் மூலம் அந்நாட்டின் அதிபராக (பொறுப்பு) பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி மீண்டும் அமெரிக்கா பயணம்! 2 மாதங்களில் 2வது முறை!