ரஷ்யா உடன் வர்த்தகம்: நெருக்கும் ட்ரம்ப் - முக்கியத்துவம் பெறும் புதினின் இந்திய வருகை!
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகை தருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.
புதினின் வருகை குறித்து ரஷ்யா தரப்பில் எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை. அஜித் தோவல், புதின் எந்த தேதியில் வருவார் எனக் குறிப்பிடவில்லை. இன்டெர்ஃபாக்ஸ் செய்திதளம் கூறுவதன்படி, இந்த ஆண்டின் இறுதியில் புதின் ரஷ்யா வரக்கூடும்.
அஜித் தோவல் சொன்னதென்ன?
அஜித் தோவல், "ரஷ்யாவுடன் சிறப்பான நீண்டகால உறவு உள்ளது. நாம் அதனை மதிக்கிறோம்... ரஷ்ய அதிபர் இந்திய வருகை குறித்து உற்சாகமாக இருக்கிறோம். தேதிகள் இப்போது இறுதி செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.
ரஷ்யாவுடன் வர்த்தகம் - உக்ரைன் போருக்கு எரிபொருள்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதால் கூடுதல் வரிவிதித்துள்ளார். இது இரண்டு நாடுகளுக்கும் இடையில் உரசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் உடனான போருக்கு எரிபொருள் ஊற்றுவதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி 25% வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதுடன், 6ம் தேதி கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் ரஷ்ய அதிபர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.
புதின் - ட்ரம்ப் சந்திப்பு
புதின் இந்தியா வருவதற்கு முன்பு ட்ரம்ப்பை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா தரப்பில் இது குறித்து ஏற்கெனவே அறிவித்திருக்கின்றனர்.
ரஷ்ய ஜனாதிபதியின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ், இருதரப்பும் ஒரு சந்திப்பை நடத்த செயலாற்றி வருவதாகவும், அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது என்றும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.
தலைவர்களின் சந்திப்புகளுக்குப் பிறகு அரசியல் களத்தின் தன்மையில் மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.