எல்லா கஷ்டங்களுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு பிரம்மஹத்தி பரிகார ஹோமம்; ஒரு மண்டலத்...
'நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்தது இப்படித்தான்' - ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் | முழு விபரம்
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முதல் பீகாரில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சூழலில் அவசர அவசரமாக ஒரே மாதத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது வரை இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
குறிப்பாக, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தேர்தலில் 70-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், குறைந்தபட்சம் 15 இடங்களில் மோசடி நடக்காமல் இருந்திருந்தால் மோடி இன்று பிரதமரே அல்ல என்றும் பகிரங்கமாக கூறியிருந்தார்.
ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தாத தேர்தல் ஆணையம், ஆதாரம் இருந்தால் வெளியிடட்டும் என்று கூறியது. ராகுல் காந்தியும் "விரைவில் ஆதாரங்களை வெளியிடுவேன்" என்று கட்சிக் கூட்டத்தில் கூறியிருந்தார்.

Anti-incumbency
இந்த நிலையில், டெல்லியில் இன்று சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து தேர்தல் முறைகேடு தொடர்பான ஆதாரங்களை ராகுல் காந்தி வெளியிட்டிருக்கிறார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, "சில காலமாகவே பொதுமக்களிடையே சந்தேகம் உள்ளது. ஒவ்வொரு ஜனநாயகத்திலும், Anti-incumbency என்பது ஒவ்வொரு கட்சியையும் பாதிக்கும் ஒன்றுதான். ஆனால், ஜனநாயக கட்டமைப்பில் Anti-incumbency-ஆல் பாதிக்கப்படாத ஒரே கட்சி பா.ஜ.க மட்டுமே என்று தெரிகிறது.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, எங்கள் சந்தேகத்திற்குப் பின்னால் உள்ள காரணத்தையும் தர்க்கத்தையும் எங்களால் வெளிப்படுத்த முடியவில்லை.
இங்கு தேர்தல் ஆணையம் எதை மறைக்கிறது?
ஆனால், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா தேர்தலில் அதை எங்கள் கண்முன்னே நாங்கள் கண்டோம்.
மகாராஷ்டிராவில், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐந்தே மாதங்களில் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை சில பகுதிகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிகமாக இருந்தது. மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் வெற்றிபெற்ற இந்தியா கூட்டணி, அடுத்த சில மாதங்களில் அதே மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் தோற்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதில் பிரச்னையின் சாராம்சம் என்னவென்றால், தேர்தல் ஆணையம் எங்களுக்கு வாக்காளர் பட்டியலை வழங்க மறுத்ததுதான்.

மின்னணு வடிவிலான (soft copy) மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலை நாங்கள் கேட்டோம். ஏனெனில் தேர்தல் தரவுகளை ஆராய அது முக்கியம். ஆனால் தேர்தல் ஆணையம் எங்கள் வேண்டுகோளை நிராகரித்தது.
அடுத்தபடியாக, வாக்குச்சாவடி சிசிடிவி காட்சிகளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் விதிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றியது.
பொதுமக்களுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மைக்கு உரிமை உண்டு. எந்தவொரு பதிவுகளும் அழிக்கப்படக்கூடாது. எனவே இங்கு தேர்தல் ஆணையம் எதை மறைக்கிறது?
ஆதாரத்துடன் விளக்குகிறேன்
எங்களிடம் 7 அடி உயரத்துக்கு பேப்பரில் வாக்காளர் பட்டியல் இருக்கிறது. எத்தனை பேரின் பெயர் ஒருமுறைக்கு மேல் வந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்ய நினைத்தோம்.
ஒவ்வொரு பேப்பரிலும் உள்ள ஒவ்வொரு புகைப்படத்துடனும், அவர்களின் படத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இது மிகவும் கடினமானது.
அப்போதுதான், தேர்தல் ஆணையம் ஏன் எங்களிடம் வாக்காளர் பட்டியலின் மின்னணு தரவுகளைக் கொடுக்கவில்லை என்று புரிந்தது. எங்களிடமிருந்த வாக்காளர் பட்டியலை ஆராய ஆறு மாதங்கள் ஆனது.
THIS IS HOW BANGALORE CENTRAL LOK SABHA SEAT WAS STOLEN
— Congress (@INCIndia) August 7, 2025
❓ How did the Election Commission of India collude with the BJP to steal the election?
Listen to LoP Shri @RahulGandhi explain this organised vote theft.
There were 1,00,250 votes stolen in the Mahadevapura assembly… pic.twitter.com/jUnoF1Djcx
நாடாளுமன்றத் தேர்தல் மோசடியில், இந்தியத் தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வுடன் எவ்வாறு கூட்டுச் சேர்ந்தது இப்போது ஆதாரத்துடன் விளக்குகிறேன்.
கர்நாடகாவில் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 1,00,250 வாக்குகள் மோசடி செய்யப்பட்டிருக்கின்றன.
இதில், போலி வாக்காளர்களின் 11,965, போலி முகவரி கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 40,009, ஒற்றை முகவரியிலுள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 10,452, போலி புகைப்படம் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 4,132, படிவம் 6 முறைகேடு வாக்காளர்களின் எண்ணிக்கை 33,692.
கர்நாடகாவில் 16 இடங்கள் நாங்கள் வெல்வோம் என்று எங்களின் உள்கருத்துக்கணிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 9 இடங்களில்தான் வெற்றிபெற்றோம். பின்னர், கணிப்பிலிருந்து தவறிய 7 தொகுதிகளில் கவனம் செலுத்தினோம்.
அதற்கான தரவுகளை தேர்தல் ஆணையத்திடம் பெற்று ஆராய்ந்தோம். பெங்களூரு மத்திய தொகுதியில் பா.ஜ.க 6,58,915 வாக்குகளைப் பெற்று, 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அங்கு, மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியை ஆராய்ந்ததில் அங்கு காங்கிரஸ் 1,15,586 வாக்குகளைப் பெற்றது. அதேசமயம் பா.ஜ.க 2,29,632 வாக்குகளைப் பெற்றது.
வித்தியாசம் மட்டும் 1,14,046 வாக்குகள். இது மிகப்பெரிய வித்தியாசம் என்பதால் அதில் ஆராய்ந்தபோதுதான், மகாதேவபுரா சட்டமன்றத்துக்குட்பட்ட பகுதியில் மொத்தம் உள்ள 6,50,000 வாக்குகளில் தோராயமாக 1,00,250 வாக்குகள் மோசடி செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்தோம்.
இதுதான் பெங்களூரு மத்திய தொகுதியில் பா.ஜ.க-வின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது.
குறைந்த பெரும்பான்மையுடன்தான் பிரதமர் இன்று பிரதமராக இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். 25 இடங்கள் மட்டும்தான்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் இப்போது ஆதாரம். ஒரு தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடந்த மோசடிக்கான ஆதாரம்.
எனவே, மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்திருக்கிறது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.
இந்த மோசடி இந்திய அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம்.
LIVE: Special press briefing by LoP Shri @RahulGandhi | #VoteChori | AICC HQ, New Delhi. https://t.co/3WzBejfgrw
— Congress (@INCIndia) August 7, 2025
நாடு முழுவதும், ஒவ்வொரு மாநிலமாக மிகப்பெரிய அளவில் இந்த மோடி நடக்கிறது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.
வாக்குச் சாவடி சிசிடிவி காட்சிகளும், வாக்காளர் பட்டியலும்தான் இந்த குற்றத்திற்கான ஆதாரம்.
அதைத் தேர்தல் ஆணையம் அழிக்க முயற்சிப்பதில் மும்முரமாக உள்ளது. எனவே இந்த நாட்டில் ஒரு பெரிய குற்றவியல் மோசடி நடந்து வருகிறது என்பதை நாடு அறிய வேண்டும்.
இது தேர்தல் ஆணையத்தாலும் ஆட்சியில் உள்ள கட்சியாலும் செய்யப்படுகிறது. இங்கே நாங்கள் உங்களுக்குத் தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாத ஆதாரத்தை வழங்கியுள்ளோம்." என்று கூறினார்.