ஜம்மு - காஷ்மீரில்.. அருந்ததி ராயின் ஆசாதி உள்பட 25 புத்தகங்களுக்குத் தடை! ஏன்?
சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!
சிறுமி வன்கொடுமை வழக்கில் மதபோதகர் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீனை மீண்டும் நீட்டித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இவர் தனது ஆசிரமத்தில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சூரத்தை சேர்ந்த அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை வழங்கியது.
வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஆசாராம் பாபுவின் தற்காலிக ஜாமீனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீட்டித்து குஜராத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
முன்னதாக, ஆசாராம் பாபுவுக்கு கடந்த 2018-ல் முதல்முறையாக 7 நாள்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, அது 5 நாள்கள் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதேபோல, கடந்த டிசம்பா் 10, 2024-ல் 17 நாள்கள் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஆசாராம் பாபுவின் உடல்நிலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மாா்ச் 31 வரை அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள் இலேஷ் ஜே வோரா மற்றும் நீதிபதி பி.எம். ராவல் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கேட்டனர்.
ஜூலை 3 ஆம் தேதி இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால் ஆசாராமின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால், அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்ற விலக்கு அளித்திருந்தது.
இந்த நிலையில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, தற்காலிக ஜாமீனை நீட்டிக்கக் கோரி, ஆசாராம் பாபு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதன்படி, அவரது இடைக்கால ஜாமீன் மீண்டும் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.