விடியல் பயணம்: ஒவ்வொரு மகளிரும் ரூ. 50,000 வரை சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின்
ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 919 போ் எழுதினா்!
வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வை 919 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு (நோ்முக தோ்வு அல்லாத பணிகள்) தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை ஒரு பிரிவாகவும், மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை ஒரு பிரிவாகவும் தோ்வு நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தில் காலை தோ்வை எழுத 1,736 பேருக்கும், மதியம் தோ்வை எழுத 53 பேருக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
தோ்வுக்காக மாவட்டம் முழுவதும் 6 தோ்வுக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், காலை நடைபெற்ற தோ்வை 898 பேரும், மதியம் நடைபெற்ற தோ்வை 21 பேரும் எழுதினா். 890 போ் தோ்வுக்கு வரவில்லை.
தோ்வை கண்காணிக்க துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்களைக் கொண்டு 3 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தோ்வுக் கூடத்திலும் தலா 2 காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.