மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!
மதுரை எஸ்.ஆலங்குளம்: `வீட்டுக்கு வெளிய சாக்கடை இருக்கலாம்; வீடே சாக்கடையா இருந்தா எப்படி?'
மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் 18ம் வார்டு இமயம் நகர், பிரசன்னா நகரில் வீட்டிற்கு வெளிப்புறம் உள்ள திறந்தவெளி சாக்கடை நிரம்பி வீட்டிற்குள் புகுந்து மூன்று மாதங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் சாக்கடையுடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அந்த வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. மேலும் தற்சமயம் அடிக்கடி மழை பெய்து வருவதால் இந்நிலை மேலும் மோசமடைந்து அவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
“சும்மாவே சாக்கடை வீட்டுக்குள்ள இருக்கதால நாற்றம் தாங்கல, இதுல மழைலாம் வரப்போ ரொம்ப கொடுமையா இருக்கும் எப்படா மழை நிக்கும்னு வேண்டிகிட்டே இருப்போம். மழை அதிகமா பெஞ்சா ரோடு, வாசல்னு எல்லாம் சாக்கடைக்காடா மாறிடும்” எனக் குமுறுகிறார்கள் அந்த பகுதி மக்கள்.

தொற்று நோய்கள் பரவும் அபாயம்:
டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்கள் பெரும்பாலும் தேங்கிய நீரிலேயே அதிகம் பரவுகிறது. அவ்வாறு நீர் தேங்க விடாமல் வீடு வீடாக சென்று அறிவுரை கூறி மருந்து ஊற்றும் மாநகராட்சி, புழுக்கள் நிறைந்த சாக்கடை வீடுகளை சூழ்ந்து ஆபத்தான நிலையில் வாழும் இவர்களை கண்டு கொள்ளாமல் அலைக்கழிப்பது ஏன்?
“சாக்கடை நிரம்பி புழுவச்சு இருக்கதால கொசுத்தொல்லை அதிகமா இருக்கு, நிறையா முறை புகார் கொடுத்துட்டோம் யாருமே இன்னும் வந்து பார்க்கல. பிள்ளைகளுக்கு முடியாம போய்டே இருக்கு” என்கிறார்கள் அந்த மக்கள்.
மூன்று மாதங்களுக்கு மேலாக சாக்கடையுடன் வாழும் மக்கள்:
வீடுகளுக்குள் புகுந்த சாக்கடையால் மாதக்கணக்கில் துன்புறும் மக்கள் பலமுறை மாநகராட்சி, அரசு அலுவலர்கள், கவுன்சிலர் என புகார் அளித்தும், முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் சிலர் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.
“கம்ளைன்ட் கொடுக்க போனா காது குடுத்தே கேக்க மாட்றாங்க, தொடர்ந்து ஒரு மாசமா மாநகராட்சில போய் கம்ப்ளைன்ட் கொடுத்தோம் ஆனாலும் இன்னும் யாரும் வந்து பாக்கல, இன்னும் என்னதான் செய்யனே தெரியல ஓட்டு கேட்டு மட்டும் வாராங்க ஏதாச்சும் பிரச்னைனா எட்டிக்கூட பாக்க மாட்றாங்க” என்கின்றனர்.


ஆக்கிரமிப்புகளே முக்கிய காரணம் :
இந்த பிரச்னையின் மூலக் காரணமே அப்பகுதியில் உள்ள சிலர் திறந்தவெளி சாக்கடையை ஆக்கிரமித்து அவர்கள் வீட்டு படிகளை கட்டியுள்ளனர். இதனால் அந்த இடங்களில் குப்பைகள் அடைத்து சாக்கடை அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை கூறியும் அகற்ற மறுக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே இந்த பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.
இதுகுறித்து வார்டு கவுன்சிலர் நவநீதகிருஷ்ணனிடம் பேசியபோது, விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடையை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.