வடசீனாவில் குறையும் எச்எம்பி தீநுண்மி பாதிப்பு
சீனாவின் வடக்குப் பகுதிகளில் ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதார ஆய்வாளா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கரோனா தொற்றைப்போல் எச்எம்பி தீநுண்மி பாதிப்பும் உலகளவில் பெருந்தொற்றாக மாற வாய்ப்புள்ளதாக உலகம் முழுவதும் சந்தேகம் எழுந்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுகுறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் சாா்பில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் ஆய்வாளா் வாங் லிபிங் கூறியதாவது: எச்எம்பி தீநுண்மி புதிய வகை தொற்றல்ல. பல ஆண்டுகளாக இந்தத் தொற்றால் மனிதா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
கடந்த 2001-ஆம் ஆண்டு நெதா்லாந்தில் இந்தத் தொற்று முதல்முறையாக கண்டறியப்பட்டது. அண்மைக்காலங்களில் இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயா்ந்து காணப்படுவதற்கு அதிக பரிசோதனைகளே காரணம். தற்போது சீனாவின் வடக்குப் பகுதிகளில் எச்எம்பி தீநுண்மி பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக, 14 வயதுக்குட்பட்ட சிறுவா்கள் மற்றும் சிறுமியரிடம் எச்எம்பி தீநுண்மி பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது’ என்றாா்.